அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் - பிரேமலதா விஜயகாந்த்

மருத்துவ தரநிலைகளை தமிழக அரசு உடனடியாக பலப்படுத்த வேண்டும் என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

திருச்சி புத்தூர் பகுதியில் உள்ள மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த செவிலியர் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயிலும் மாணவி சீதாலட்சுமி (19 வயது) தவறான மற்றும் அளவுக்கு அதிகமான மயக்க மருந்து செலுத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவத்தில் உயிரிழந்தது மிகுந்த அதிர்ச்சியும், அறுவை சிகிச்சை வேதனையும் அளிக்கிறது.

மருத்துவ துறையில் கடைபிடிக்க வேண்டிய அடிப்படை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் மருத்துவ நடைமுறைகள் சரியாக பின்பற்றப்படாததே இந்த இளம் மாணவியின் உயிரிழப்பிற்கு காரணம் என சகமாணவிகள், பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்த சம்பவம் அரசு மருத்துவமனைகளின் செயல்பாடு மற்றும் நோயாளி பாதுகாப்பு குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது.

உயிரிழந்த மாணவி சீதாலட்சுமியின் குடும்பத்தினருக்கும், சகமாணவிகளுக்கும் தேமுதிக சார்பாக எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். மாணவியின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். மேலும், இந்த சம்பவத்திற்கு காரணமான மருத்துவர்கள் மற்றும் தொடர்புடைய அதிகாரிகள் மீது உடனடி மற்றும் பாரபட்சமற்ற விசாரணை நடத்தி, சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசை கேட்டுக்கொள்கிறோம்.

அத்துடன், மருத்துவமனைகளில் நோயாளிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான கண்காணிப்பு மற்றும் மருத்துவ தரநிலைகளை தமிழக அரசு உடனடியாக பலப்படுத்த வேண்டும். மேலும் இனி இதுபோன்ற துயர சம்பவங்கள் நடைபெறாத வகையில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதையும் தேமுதிக சார்பாக வலியுறுத்துகிறோம். "மருத்துவம் பயிலும் செவிலியருக்கே இந்த நிலை என்றால், சாதாரண மக்களின் நிலை என்ன?" என்ற கேள்விக்குறி அனைவரின் மனதிலும் எழுகிறது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com