

சென்னை,
உலக தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறனின் மகன் மாணிக்கம் நெடுமாறன் (வயது 57) ஆஸ்திரேலியாவில் காலமானார்.
இளம் வயதிலேயே உலக இன்பங்களை துறந்து புத்த மதத்தை தழுவிய மாணிக்கம் நெடுமாறன், ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் ஒரு புத்த துறவியாக வாழ்ந்து வந்தார். இந்த நிலையில், கடந்த சில காலமாக அவர் கடுமையான புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலன் அளிக்கவில்லை. நேற்று காலை இந்திய நேரப்படி 8.45 மணியளவில் மாணிக்கம் நெடுமாறன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது இறுதிச்சடங்குகள் புத்த மத வழக்கப்படி மெல்பர்ன் நகரிலேயே நடைபெற உள்ளது.
மகனின் இறுதிச்சடங்கில் பங்கேற்க பழ.நெடுமாறனும், அவரது மனைவியும் ஆஸ்திரேலியா செல்ல முடிவு செய்தனர். ஆனால், பழ.நெடுமாறனின் பாஸ்போர்ட் முடக்கப்பட்டிருப்பதால் அவராலும், அவரது மனைவியாலும் மகனின் இறுதி சடங்கில் பங்கேற்க இயலவில்லை என உலகத் தமிழர் பேரமைப்பு மிகுந்த வேதனையுடன் தெரிவித்துள்ளது.
பெற்ற மகனின் இறுதிச்சடங்கிற்கு கூட செல்ல முடியாமல், அவனது உடலைக் கூட நேரில் பார்க்க முடியாத அவல நிலைக்கு தள்ளப்பட்ட பழ.நெடுமாறனின் நிலை, தமிழ் உணர்வாளர்கள் மற்றும் அரசியல் வட்டாரத்தில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த துயர செய்தியை உலக தமிழர் பேரமைப்பு மிகுந்த வேதனையுடன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மாணிக்கம் நெடுமாறனின் மறைவு செய்தி அறிந்த தமிழகத்தை சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், தமிழ் அமைப்புகளின் நிர்வாகிகள் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.