

இதுக்குறித்து பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
சென்னை கடற்கரை பகுதிகளை பிளாஸ்டிக் இல்லா கடற்கரை பகுதிகளாக பராமரிக்கும் வகையில் நேற்று முதல் சென்னை மாநகராட்சியின் சார்பில் மெரினா, பெசன்ட் நகர் மற்றும் திருவான்மியூர் கடற்கரை பகுதிகளில் சம்பந்தப்பட்ட சுகாதார அலுவலர்கள் தலைமையில் காலை, மாலை இருவேளைகளிலும் ஆய்வு செய்யப்பட்டு, பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்படுவதுடன், கடை உரிமையாளர்களுக்கு அதிகபட்ச அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி மெரினா கடற்கரையில் நேற்று காலை மேற்கொள்ளப்பட்ட களஆய்வில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்திய 18 கடை உரிமையாளர்களிடமிருந்து ரூ.1,800 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியில் ஜூலை 27-ந்தேதி முதல் ஆகஸ்டு 2-ந்தேதி வரை ஒருவார காலத்தில் 2 ஆயிரத்து 548 உரிமையாளர்களிடமிருந்து 1,861 கிலோகிராம் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.9 லட்சத்து 17 ஆயிரத்து 100 அபராதம் விதிக்கப்பட்டது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.