பெண் ஊழியருக்கு ஓய்வூதிய பணப்பலன்களை வட்டியுடன் வழங்க வேண்டும்: சென்னை ஐகோர்ட்டு உத்தரவு

சென்னை ரெயில்வே தொழிலாளர்கள் கடன் சங்கத்தில் வேலை செய்த ஒரு பெண் ஊழியருக்கு, சங்கத்தின் உதவி செயலாளராக பணியாற்றிய ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்தார்.
பெண் ஊழியருக்கு ஓய்வூதிய பணப்பலன்களை வட்டியுடன் வழங்க வேண்டும்: சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
Published on

சென்னை சென்டிரல் ரெயில் நிலையம் அருகே ரெயில்வே தொழிலாளர்கள் கடன் சங்கம் உள்ளது. இங்கு வேலை செய்த பெண் ஊழியர் ஒருவருக்கு சங்கத்தின் உதவி செயலாளராக பணியாற்றிய நாககேசரி என்பவர் பாலியல் தொல்லை கொடுத்தார். இதுகுறித்து, மாநில மனித உரிமைகள் ஆணையம், தேசிய மனித உரிமைகள் ஆணையம், முதல்-அமைச்சரின் தனிப்பிரிவு, மகளிர் ஆணையம், சென்னை போலீஸ் கமிஷனர், ரெயில்வே பொது மேலாளர் ஆகியோரிடம் பெண் ஊழியர் புகார் மனு கொடுத்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் 3 விசாரணை குழுக்கள் அமைக்கப்பட்டன. இந்த 3 விசாரணை குழுவும் சங்க நிர்வாகத்திற்கு ஆதரவாகவும், பெண் ஊழியர் தரப்புக்கு போதிய வாய்ப்பு அளிக்காமலும் விசாரித்தது என்று குற்றம் சாட்டப்பட்டது.

இந்த நிலையில் 2003-ம் ஆண்டு ஜூன் 6-ம் தேதி பெண் ஊழியருக்கு எதிராக 7 குற்றச்சாட்டுகளை சுமத்தி மெமோ கொடுக்கப்பட்டது. பின்னர், 2004-ம் ஆண்டு மார்ச் மாதம் பெண் ஊழியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதற்கிடையில் பெண் ஊழியர் கொடுத்த புகாரின் அடிப்படையில், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக இருந்த நிர்மலா சீதாராமன், ஐகோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி கே.சம்பத் உள்ளிட்டோர் அடங்கிய குழு, 22 சாட்சிகளிடம் விசாரணை நடத்தியது. விசாரணை முடிவில், விசாகா வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ள வழிகாட்டுதல்கள் இந்த வழக்கில் பின்பற்றப்படவில்லை. குற்றச்சாட்டுக்கு ஆளான நாககேசரியை உடனடியாக பணியிடை நீக்கம் செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உடனடியாக பணி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட உத்தரவுகளை பிறப்பித்தது.

இதன்படி வேலைக்கு சேர்த்துக்கொள்ளப்பட்ட பெண் ஊழியர், கடந்த 2023-ம் ஆண்டு ஓய்வு பெற்றார். ஆனால் அவர் மீதான துறை ரீதியான விசாரணை 2004-ம் ஆண்டில் இருந்து தொடர்ந்து நடந்து வருகிறது. இதனால் ஓய்வூதிய பணப்பலன்களை வழங்கவில்லை. இதுகுறித்து சென்னை ஐகோர்ட்டில் அவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டி.பரதசக்கரவர்த்தி, 'பெண்களுக்கு அரசியல் அமைப்பில் தரப்பட்டுள்ள உத்தரவாதத்தை உறுதி செய்வது நிர்வாகத்தின் கடமை ஆகும். ஆனால், பணியிடத்தில் பெண் ஊழியருக்கு பாலியல் தொந்தரவு தந்த நபர் மீது நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. போலீசார் பதிவு செய்த வழக்கில் நாககேசரிக்கு கோர்ட்டு சிறை தண்டனை வழங்கியும் அவர் மீது நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்த நிலையில், நாககேசரி மரணமடைந்துள்ளார். பாலியல் புகார் கொடுத்த மனுதாரர் மீதே குற்றச்சாட்டு சுமத்தி 2003 மற்றும் 2004-ம் ஆண்டு கொடுக்கப்பட்ட குற்றச்சாட்டு மெமோ காலாவதியாகிவிட்டன. எனவே மனுதாரர் ஓய்வு பெற தகுதியானவர் என்பதால், அவர் ஓய்வு பெற்ற நாளில் இருந்து 6 சதவீத வட்டியுடன் பண பலன்களை வழங்க வேண்டும்' என்று உத்தரவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com