கட்டுமான தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம்: இ.பி.எப்.ஓ. புதிய திட்டம்

இ.எஸ்.ஐ. மருத்துவ காப்பீட்டு வசதிகளை வழங்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
கட்டுமான தொழிலாளர்
Published on

சென்னை,

கட்டுமான தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவது குறித்து தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் பரிசீலனை செய்துவருகிறது.

கட்டுமான தொழிலாளர்கள்

'இ.பி.எப்.ஓ. 3.0' என்ற புதிய தளத்தின் ஒரு பகுதியாக, கட்டுமான தொழிலாளர்கள் நல வரி மூலம் திரட்டப்பட்ட உபரி நிதியை இதற்காக பயன்படுத்தத் திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த ஓய்வூதிய திட்டத்தின் கீழ் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பணிபுரிந்த கட்டுமான தொழிலாளர்களை பயனாளிகளாக சேர்க்க ஆலோசிக்கப்படுகிறது.

மத்திய அறங்காவலர் குழு

சமீபத்தில் நடந்த மத்திய அறங்காவலர் குழு கூட்டத்தில் இதுகுறித்து விவாதிக்கப்பட்டது. திட்டம் இறுதி செய்யப்பட்ட பிறகு, இறுதி முடிவுக்காக மீண்டும் அறங்காவலர் குழுவிடம் சமர்ப்பிக்கப்பட உள்ளது. கட்டுமான பணிகளுக்கு விதிக்கப்படும் இந்த வரி, 1996-ம் ஆண்டு சட்டத்தின் கீழ் மாநில அரசுகளால் நிர்வகிக்கப்படுகிறது. இதன் பயன்பாடு கவலையளிக்கும் வகையில் இருந்ததால், இந்த நிதியை முறையாக பயன்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த 2024-ம் ஆண்டு ஜூன் மாத நிலவரப்படி, நாடு முழுவதும் 5.7 கோடி தொழிலாளர்கள் நல வாரியங்களில் பதிவு செய்திருக்கின்றனர். அதே ஆண்டு மார்ச் மாதம் வரை, இந்த வாரியங்கள் ரூ.1 லட்சத்து 12 ஆயிரம் கோடி வரியாக வசூலித்துள்ளன. இதில் ரூ.64 ஆயிரத்து 190 கோடி செலவிடப்பட்டு உள்ளது. வட்டி மற்றும் இதர வருவாய்கள் போக, ரூ.65 ஆயிரத்து 970 கோடி கையிருப்பில் உள்ளது.

முறைசாரா துறை

கட்டுமான தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த மாநில அரசுகளுடன் ஒருங்கிணைந்து செயல்படுவது அவசியமாகும். மேலும், அவர்களுக்கு இ.எஸ்.ஐ. மருத்துவ காப்பீட்டு வசதிகளை வழங்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதற்கான பங்களிப்பை கட்டுமான தொழிலாளர் நல நிதியிலிருந்து செலுத்தவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. முறைசாரா துறையில் உள்ள தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு அளிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்தத் திட்டம் கருதப்படுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com