'துரோகம் செய்தவர்களை மக்கள் நம்ப தயாராக இல்லை' - ஓ.பன்னீர்செல்வம்

அனைவருக்கும் துரோகம் செய்தவர்களை நம்புவதற்கு மக்கள் தயாராக இல்லை என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
'துரோகம் செய்தவர்களை மக்கள் நம்ப தயாராக இல்லை' - ஓ.பன்னீர்செல்வம்
Published on

சென்னை,

துரோகம் உள்ளே நுழைந்ததால் அ.தி.மு.க.வின் நிலை அதளபாதாளத்திற்கு சென்றுவிட்டது என முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-

"தமிழ்நாட்டு மக்களுக்கு பொற்கால ஆட்சியை அளிக்க வேண்டும் என்பதற்காக முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். துவக்கி வைத்த மாபெரும் மக்கள் இயக்கமாம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், தொடர்ந்து மூன்று முறை எம்.ஜி.ஆர். தலைமையில் ஆட்சி அமைத்தது.

சத்துணவுத் திட்டம், பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை 31 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக உயர்த்தியது, தஞ்சையில் தமிழ்ப் பல்கலைக்கழகம் உட்பட பல்வேறு பல்கலைக்கழகங்களை உருவாக்கியது, இலவச வேட்டி சேலைத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது, ஐந்தாவது உலகத் தமிழ் மாநாட்டை நடத்தியது எனப் பல்வேறு சாதனைகளை எம்.ஜி.ஆர் நிகழ்த்திக் காட்டினார்.

எம்.ஜி.ஆர். மறைவிற்குப் பிறகு, பல்வேறு தடைகளை தகர்த்தெறிந்து ஜெயலலிதா கழகப் பொதுச் செயலாளராக பொறுப்பேற்றுக் கொண்டு, நான்கு முறை தமிழ்நாட்டில் அ.தி.மு.க. ஆட்சியை அமைத்தார். தொட்டில் குழந்தைத் திட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையம், மகளிர் சுயஉதவிக் குழுக்கள், விலையில்லா அரிசி, கட்டணமில்லா கல்வி எனப் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களைச் செயல்படுத்தி சாதனை படைத்தார்.

நாடாளுமன்ற மக்களவையில் அ.தி.மு.க.வை மூன்றாவது பெரிய கட்சியாக உருவாக்கிய பெருமை ஜெயலலிதாவையே சாரும். அவரது மறைவிற்குப் பிறகு, துரோகம் உள்ளே நுழைந்ததன் விளைவாக, அதர்மங்கள் அதிகரித்து துரோகச் செயல்கள் தாண்டவமாடி, கட்சி அதலபாதாளத்திற்கு சென்றுவிட்டது. அனைவருக்குமான கட்சி என்ற நிலை துரோகக் கூட்டத்தால் குழிதோண்டி புதைக்கப்பட்டதன் காரணமாக, நாடாளுமன்ற மக்களவையில் மூன்றாவது பெரிய கட்சியாக இருந்த அ.தி.மு.க. இன்று வெற்றிடமாக காட்சியளிக்கிறது.

7 மக்களவை தொகுதிகளில் டெபாசிட் இழப்பு, 12 தொகுதிகளில் 3-வது இடம், கன்னியாகுமரியில் 4-வது இடம், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் 4-வது இடம் என படுதோல்வியில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க. சந்தித்தது. இதன்மூலம், முதல்-அமைச்சர் பதவிக்கு பரிந்துரைத்தவர், முதல்-அமைச்சர் பதவியில் அமர்த்தியவர், முதல்-அமைச்சர் பதவியில் தொடர துணை புரிந்தவர்கள் என அனைவரையும் முதுகில் குத்திய துரோகியை மக்கள் நம்பத் தயாராக இல்லை என்பது தெளிவாகிறது.

இந்தத் துரோகச் செயல் காரணமாக, ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் 45 சதவீதமாக இருந்த வாக்கு வங்கி இன்று 20 சதவீதமாக குறைந்துவிட்டது. இப்படிப்பட்ட "துரோகம்" தியாகத்தைப் பற்றி பேசுவது சாத்தான் வேதம் ஒதுவதுபோல் உள்ளது. இந்த நிலைமை நீடித்தால், எத்தனை ஆண்டுகளானாலும் அ.தி.மு.க. ஆட்சி அமைக்க முடியாது என்பதோடு மட்டுமல்லாமல், அதன் வாக்கு சதவீதம் குறைந்து கொண்டே செல்லும். வெற்றிக் கனி என்பது எட்டாக் கனியாகிவிடும்.

அ.தி.மு.க. வீறுகொண்டு எழ வேண்டுமென்றால், பிரிந்தவர்கள் ஒன்றிணைய வேண்டும். பிரிந்தவர்கள் ஒன்றிணைய வேண்டுமென்றால் பண்புள்ளவர்கள் தலைமைப் பதவிக்கு வர வேண்டும். எனவே, "எனக்குப் பின்னாலும், இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும், அ.தி.மு.க. மக்களுக்காகவே இயங்கும்" என்ற ஜெயலலிதாவின் எண்ணத்தை நிறைவேற்றிட, 2026-ம் ஆண்டு சட்டமன்ற பொதுத் தேர்தலில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து களப் பணியாற்றி அ.தி.மு.க.வை ஆட்சிக் கட்டிலில் அமர வைக்க உறுதி ஏற்போம்."

இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com