

சென்னை,
சென்னை மாநகராட்சியின் ஜூன் மாதத்திற்கான மன்றக்கூட்டம் இன்று நடைபெற்றது. கடந்த பிப்ரவரி மாதம் கடைசியாக மாதாந்திர கூட்டம் நடைபெற்ற நிலையில், 3 மாத இடைவெளிக்குப் பின் இன்று மாநகராட்சி மன்றக்கூட்டம் மேயர் பிரியா தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மேயர் பிரியா பேசியதாவது;-
“தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராக இருந்த காலத்தில் ஆற்றிய பணிகள் எல்லாம் தமிழ் சமுதாயத்தின் முன்னேற்றத்திற்காகவும், வளர்ச்சிக்காகவும் இருந்தது என்பதை அறிவோம். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சியில் அமரவில்லை என்றாலும், தி.மு.க. கொண்டு வந்த திட்டங்களைத்தான் இன்றைய அரசு செயல்படுத்தி வருகிறது.
தமிழக முதல்-அமைச்சர் விஜய், அண்மையில் டெல்லியில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்று பேசியபோது, உலக அளவில் நிச்சயமற்ற பொருளாதார சூழல் நிலவி வரும் நிலையிலும், இந்தியாவில் 2-வது மிகப்பெரிய பொருளாதாரம் கொண்ட மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது என்றார்.
2024-25ம் ஆண்டு 11.19 சதவீதம் இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியை அடைந்தது தமிழ்நாடு. 2025-26ம் நிதியாண்டில் 10.81 சதவீதம் பொருளாதார வளர்ச்சியை தமிழ்நாடு தக்கவைத்துள்ளது எனவும், இந்தியாவில் தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண்களில் 45 சதவீதம் பேர் தமிழ்நாட்டில் பணிபுரிகிறார்கள் என்று இன்றைய முதல்-அமைச்சர் நிதி ஆயோக் கூட்டத்தில் பேசியுள்ளார் என்பது திராவிட மாடல் அரசின் முழு வெற்றியாகும்.
தி.மு.க. அரசு கொண்டு வந்த திட்டங்களின் பெயர்களை மாற்றியமைத்தாவது தொடர்ந்து செயல்படுத்தினால்தான் இன்றைய அரசு நிலைக்க முடியும் என்பது உண்மை. மேலும், பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் தி.மு.க. கவுன்சிலர்கள் பொறுப்பேற்ற நாள்முதல் எண்ணற்ற பணிகளை செய்துள்ளோம்.
பெண்களுக்கான தனி உடற்பயிற்சி கூடங்கள், பூங்காக்கள், மழைநீர் சேமிக்கும் வகையில் ஸ்பான்ச் பூங்காக்கள், மழைநீர் வடிகால்வாய்கள், சமுதாய நலக்கூடங்கள், தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிக் கட்டிடங்கள், புதிய தார் சாலைகள், போக்குவரத்து நெரிசலை குறைக்க மேம்பாலங்கள் என பல்வேறு பணிகளை செய்து வந்துள்ளோம்.
ஆனால் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் சென்னையில் 2 தொகுதிகள் தவிர்த்து மற்ற அனைத்து தொகுதிகளிலும் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வெற்றி வாய்ப்பை இழந்தன. இந்நிலையில், மக்கள் தற்போது தி.மு.க.விற்கு வாக்களிக்க தவறிவிட்டோமே என நினைத்து வருந்திக் கொண்டிருக்கிறார்கள். தொடர் மின்வெட்டால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
ரீல்ஸ் பார்த்து ரியல் ஆட்சியை இழந்துவிட்டோம் என மக்கள் வருந்திக் கொண்டிருக்கிறார்கள். தி.மு.க.வின் இந்த தோல்வி தற்காலிகமானதுதான். தி.மு.க. மீண்டும் வெற்றி பெறும். எனவே மாமன்ற உறுப்பினர்கள் தொய்வின்றி மக்கள் பணியை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.