சென்னையில் தொடர் மின் வெட்டால் மக்கள் அவதி: தவெக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல்

மின்தடை குறித்துப் பொதுமக்கள் மின்வாரிய அலுவலகங்களை தொடர்பு கொண்டு புகார் அளிக்க முயன்றால், முறையான பதில்கள் அதிகாரிகளிடம் இருந்து கிடைப்பதில்லை என்று மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
சென்னையில் தொடர் மின் வெட்டால் மக்கள் அவதி: தவெக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல்
Published on

சென்னை,

இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொதுச்செயலாளர் நிஜாம் முகைதீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

தலைநகர் சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக, பல மணி நேரம் நீடித்து வரும் கடுமையான மின்வெட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை முற்றிலுமாக முடக்கியுள்ளது பெரும் கவலையளிக்கிறது. கோடைக்கால வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில், அறிவிக்கப்படாத இந்த மின்தடை பொதுமக்களை பெரும் துயரத்திற்கு உள்ளாக்கியுள்ளது. குறிப்பாக நள்ளிரவு நேரங்களில் ஏற்படும் தொடர் மின்வெட்டு காரணமாக குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நோயாளிகள் தூக்கமின்றி தவித்து வருகின்றனர்.

கடந்த ஆட்சியின்போது, கோடைக் காலத்திலும் கூட தடையில்லா மின்சாரம் வழங்கப்பட்டு வந்த சூழலில், புதிய அரசு அமைந்த சில நாட்களிலேயே, அதுவும் தலைநகர் சென்னையிலேயே மக்கள் மின்வெட்டைக் கண்டித்து வீதிக்கு வந்து போராடும் அவல நிலை ஏற்பட்டிருப்பது கவலையளிக்கிறது. கோடைக் காலத்தில் மின்சாரத் தேவை வழக்கத்தை விட பல மடங்கு அதிகரிக்கும் என்பதை நன்கு அறிந்திருந்தும் அரசும், மின்வாரியமும் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், போதிய திட்டமிடலையும் செய்யத் தவறியது ஏன் என்கிற கேள்வி எழுகிறது.

மின்தடை குறித்துப் பொதுமக்கள் மின்வாரிய அலுவலகங்களை தொடர்பு கொண்டு புகார் அளிக்க முயன்றால், முறையான பதில்கள் அதிகாரிகளிடம் இருந்து கிடைப்பதில்லை என்றும், தொலைபேசி இணைப்புகள் துண்டிக்கப்படுவதாகவும் மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

எனவே, முதலமைச்சர் அவர்கள் இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு, தடையில்லா மின்சாரம் வழங்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். கோடைக் கால மின்சுமையைத் தாங்கக் கூடிய வகையில் மின்மாற்றிகள் மற்றும் துணை மின் நிலையங்களை உடனடியாகப் பராமரிப்புச் செய்ய வேண்டும். புதிய அரசு என்பது மக்களுக்கு நிம்மதியான வாழ்வைத் தர வேண்டும்.அவர்களின் தூக்கம் கெடுக்கும் சூழலை ஏற்படுத்தக் கூடாது. மக்களின் அடிப்படைத் தேவையை நிறைவு செய்யும் அரசாகச் செயல்பட்டு, இந்த மின்வெட்டுப் பிரச்னைக்கு தவெக அரசு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com