கொட்டும் மழையில் பூஜை பொருட்கள் வாங்கிய மக்கள்

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி கொட்டும் மழையில் பூஜை பொருட்களை பொதுமக்கள் வாங்கினர். இதில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருநத களி மண் விநாயகர் சிலை மழையில் கரைந்ததால் வியாபாரிகள் தவித்தனர்.
கொட்டும் மழையில் பூஜை பொருட்கள் வாங்கிய மக்கள்
Published on

கடலூர், 

தமிழகம் முழுவதும் நேற்று விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கடலூர் மாவட்டத்திலும் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி கடலூர் மஞ்சக்குப்பம், திருப்பாதிரிப்புலியூர், முதுநகர், செம்மண்டலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பூஜை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது.

விநாயகருக்கு பிடித்தமான விளாம்பழம், நாவற்பழம், பொரி, கொண்ட கடலை, சோளம் மற்றும் ஆப்பிள், ஆரஞ்சு, சாத்துக்குடி உள்ளிட்ட வகையான பொருட்கள் விற்பனை செய்யப்பட்டன. இதில் வெற்றிலை, பாக்கு, பழம் ஒரு செட் ரூ.10-க்கும், அவல், பொரி சேர்ந்த பாக்கெட் ரூ.20 முதல் ரூ.30-க்கும், பழ வகைகள் அடங்கிய பை ரூ.80 முதல் ரூ.100-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

மழை

சிறிய விநாயகர் சிலைகள் ரூ.50 முதல் ரூ.300 வரை விற்பனை செய்யப்பட்டது. வண்ண குடைகள் ரூ.30 முதல் ரூ.50 வரை விற்பனை செய்யப்பட்டது. இதை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிச்சென்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு திடீரென மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை நேற்று மதியம் வரை விட்டு, விட்டு பெய்த வண்ணம் இருந்தது. இருப்பினும் கொட்டும் மழையிலும் பொதுமக்கள் குடை பிடித்த படியும், மழையில் நனைந்தபடியும் பூஜைக்கு தேவையான பொருட்களை வாங்கி சென்றதை பார்க்க முடிந்தது.

தொடர்ந்து மழை பெய்து வந்ததால் வியாபாரம் மந்தமாக இருந்தது. மதியத்திற்கு பிறகு மழை சற்று ஓய்ந்து இருந்தது. இதனால் வியாபாரம் சூடுபிடிக்க தொடங்கியது. கடலூர் மஞ்சக்குப்பத்தில் சாலையோரம் களி மண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை வியாபாரிகள் விற்பனைக்காக வைத்திருந்தனர். அதில் சில சிலைகள் தொடர் மழையால் கரைந்து வீணானது. இதனால் வியாபாரிகள் அதை விற்பனை செய்ய முடியாமல் தவித்தனர்.

கூட்டம்

இதற்கிடையே சில வியாபாரிகள் சிறிய அளவிலான களி மண் விநாயகர் சிலைகளை அங்கிருந்தபடியே தயார் செய்து விற்பனை செய்ததையும் பார்க்க முடிந்தது. கொட்டும் மழையிலும் பொதுமக்கள் வந்ததால் தற்காலிக உழவர் சந்தை, மஞ்சக்குப்பம், முதுநகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததை பார்க்க முடிந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com