சென்னை முழுவதும் சர்வர் முடங்கியதால் பத்திரப்பதிவு செய்ய முடியாமல் பொதுமக்கள் தவிப்பு

சென்னை முழுவதும் பத்திரப்பதிவுக்கான சர்வர் முடங்கியதால் பொது மக்கள் தவிப்புக்கு உள்ளானார்கள்.
சென்னை முழுவதும் சர்வர் முடங்கியதால் பத்திரப்பதிவு செய்ய முடியாமல் பொதுமக்கள் தவிப்பு
Published on

சென்னை,

தமிழகம் முழுவதும் 578 சார்பதிவாளர் அலுவலகம் இயங்கி வருகிறது. பத்திரப்பதிவை எளிதாக்கும் வகையில் கடந்த பிப்ரவரி 13-ந் தேதி முதல் இணையதளம் வழியாக பத்திரப்பதிவு செய்யும் முறை கொண்டுவரப்பட்டது. இந்த முறைக்கு பொது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

இந்த நிலையில், சென்னை நகரம் முழுவதும் பத்திரப்பதிவுக்கான இணையதள சர்வர் நேற்று மதியம் முதல் திடீரென்று முடங்கியது. இதனால் பத்திரப்பதிவு செய்வதற்காக வந்திருந்த பலரும் தங்கள் பணியை முடிக்க முடியாமல் அல்லலுக்கு உள்ளானார்கள். சென்னை மாதவரம் பகுதியில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் ஏராளமானவர்கள் பத்திரப்பதிவுக்காக வந்திருந்தனர். ஆனால் இணையதள சர்வர் முடங்கியதால் பத்திரப்பதிவு செய்ய முடியவில்லை. பல மணி நேரமாகியும் சர்வர் சரி செய்யப்படவில்லை.

இதனால் பத்திரப்பதிவுக்கு வந்திருந்தவர்கள் அங்கிருந்த அதிகாரிகளிடம் முறையிட்டனர். அதற்கு அதிகாரிகள், இணையதளம் மூலம் தான் பத்திரங்கள் பதிய முடியும். எழுத்து வடிவில் (ஆப்லைனில்) செய்ய முடியாது. தற்போது இணையதள சர்வர் முடங்கி விட்டதால் நாங்கள் என்ன செய்ய முடியும். இங்கே மட்டும் இந்த பிரச்சினை இல்லை. சென்னையில் எல்லா இடங்களிலும் சர்வர் வேலை செய்யவில்லை. எனவே நீங்கள் நாளை (இன்று) வாருங்கள். இணைய தளத்தில் பதிவு செய்யலாம் என்று பதில் அளித்தனர்.

இதற்கு பத்திரப்பதிவுக்காக வந்திருந்தவர்கள், நாளை (இன்று) ஆடி மாதம் பிறக்கிறது. எனவே எங்களுக்கு இன்றே (நேற்று) பத்திரப்பதிவு செய்யுங்கள் என்று வாதாடினர். ஆனால் அங்கிருக்கும் அதிகாரிகள் சர்வர் வேலை செய்யாதபோது நாங்கள் எதுவும் செய்ய முடியாது என்று கைவிரித்து விட்டனர். இதனால் இரவு வரை பத்திரப்பதிவுக்காக காத்திருந்த பொது மக்கள் ஏமாற்றத்துடனே திரும்பி சென்றனர்.

இது குறித்து மாதவரம் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு பத்திரப்பதிவுக்கு வந்த சரவணன் என்பவர் கூறும்போது, நாங்கள் காலையில் இருந்தே பத்திரப்பதிவுக்காக காத்திருந்தோம். ஆனால் சர்வர் வேலை செய்யவில்லை என்று கூறி, அதிகாரிகள் பத்திரப்பதிவு செய்யவில்லை. நாங்கள் கொடுத்த ஆவணங்களையும் திரும்பி கொடுத்து விட்டனர். இரவாகியும் அவர்கள் எந்த முடிவையும் எங்களுக்கு தெரிவிக்கவில்லை என்று தெரிவித்தார்.

சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்களில் இதே நிலை தான் நீடித்தது. இதனால் அரசுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com