கொரோனா தொடர்புடைய விதிகளை மீறி சென்னை காசிமேட்டில் குவிந்த மக்கள்

சென்னை காசிமேட்டில் கொரோனா பாதிப்புகளை பற்றிய அச்சமின்றி விதிகளை மீறி மீன் வாங்க மக்கள் குவிந்தனர்.
கொரோனா தொடர்புடைய விதிகளை மீறி சென்னை காசிமேட்டில் குவிந்த மக்கள்
Published on

சென்னை,

தமிழகத்தில் சமீப நாட்களாக கொரோனா பாதிப்புகள் நாள்தோறும் ஆயிரக்கணக்கில் பதிவாகி வருகின்றன. இதில், சென்னை பெருநகரம் முதல் இடத்தில் உள்ளது. தொடர்ந்து உயிரிழப்புகளும் அதிக அளவில் காணப்படுகிறது. இதனால், கொரோனா பாதிப்புகளின் 2வது அலையை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு மீண்டும் எடுத்துள்ளது.

அதன்படி திரையரங்குகள், வணிக வளாகங்கள், மால்களில் 50 சதவீத இருக்கைகளை மட்டும் பயன்படுத்த வேண்டும் என்று விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் நேற்று முதல் அமலுக்கு வந்தன.

எனினும் இவை முறையாக கடைப்பிடிக்கப்படுகின்றனவா? என அறிய மாநகராட்சி அதிகாரிகளும், போலீசாரும் இணைந்து ஆய்வு செய்தனர். அப்போது முககவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் அலட்சியமாக இருந்தவர்களிடம் அபராதம் வசூலிக்கப்பட்டது. இந்த அபராத அதிரடி நடவடிக்கை தொடரும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

அபராத நடவடிக்கைக்கு பயந்து பலரும் முககவசம் அணிந்தும், சமூக இடைவெளியை முறையாக கடைப்பிடித்தும் சென்றனர். இதேபோன்று, பெட்ரோல் நிலையங்களில் முககவசம் அணிந்து வந்த வாகன ஓட்டிகளுக்கு மட்டுமே பெட்ரோல்-டீசல் வழங்கப்பட்டது.

இதுபோன்ற கடுமையான நடவடிக்கைகள் எடுத்த பின்னரே மக்கள் விதிகளை பின்பற்றும் அளவுக்கு நிலைமை காணப்படுகிறது. இந்த நிலையில், விடுமுறை நாளான இன்று சென்னையில் காசிமேட்டில் உள்ள மீன் சந்தையில் மக்கள் அதிக அளவில் குவிந்தனர்.

இதில், முககவசம் முறையாக அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமலும் மக்கள் காணப்பட்டனர். சிலர் அதனை செல்போனில் படம் பிடித்தபடியும் சென்றனர். பொதுமக்களின் ஒத்துழைப்பு இன்றி கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்த முடியாது என அரசு தொடர்ந்து கூறி வருகிறது.

எனினும், அரசு தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தும் மக்களின் இதுபோன்ற பொறுப்பற்ற நிகழ்வுகளால் அதன் பலன் கேள்விக்குறியாகி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com