

சென்னை,
தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலின் சார்பில் சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் மருத்துவ கவுன்சில் விருது-2021 வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராக கலந்துகொண்ட தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஆற்றிய உரை வருமாறு:-
மருத்துவத் துறையில், அதுவும் கொரோனா பெருந்தொற்று காலத்தில் அளப்பறிய சேவையாற்றிய 31 மிகச் சிறந்த மருத்துவர்களுக்கு விருது வழங்குவது மகிழ்ச்சி அளிக்கிறது.
மிகச் சிறந்த மருத்துவராகவும் கல்வியாளராகவும் கருதப்பட்ட டாக்டர் பி.சி.ராய்-ன் பிறந்த நாளான ஜூலை 1-ந் தேதி, மருத்துவர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது. அவரது பிறந்த நாளை கொண்டாடும் விதத்தில், சிறந்த சேவையாற்றிய மருத்துவர்களுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன.
உங்களிடம் இருந்து மக்கள், நேர்மை, அர்ப்பணிப்பு, திறமை போன்றவற்றை அதிகமாக எதிர்பார்க்கின்றனர். புன்னகையுடன் செயல்படுங்கள். நோயாளிகளிடமும், உறவினர்களிடமும் விளக்கம் அளிக்க நேரம் ஒதுக்குங்கள். நோயை நீக்குவது மட்டுமல்லாமல், அவர்களுக்கு சமாதானமும், மகிழ்ச்சியும் உண்டாக கூடுதலாக உழையுங்கள். சில ஆண்டுகள் ஊரகப் பகுதிகளுக்கும் சென்று பணியாற்றுங்கள்.
கொரோனா தொற்று பரவலை தடுப்பதற்கு அரசுக்கு மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு தாருங்கள். அதற்காக அறிவிக்கப்பட்டுள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.