மீண்டும் ஒரு 'டிசம்பர்-15' வெள்ள அபாயம் வந்துவிடுமோ என மக்கள் அச்சமடைந்துள்ளனர் - மு.க.ஸ்டாலின்

மீண்டும் ஒரு 'டிசம்பர்-15' வெள்ள அபாயம் வந்துவிடுமோ என மக்கள் அச்சமடைந்துள்ளதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மீண்டும் ஒரு 'டிசம்பர்-15' வெள்ள அபாயம் வந்துவிடுமோ என மக்கள் அச்சமடைந்துள்ளனர் - மு.க.ஸ்டாலின்
Published on

சென்னை,

மீண்டும் ஒரு 'டிசம்பர்-15' அபாயம் வந்துவிடுமோ என மக்கள் அஞ்சும் அளவுக்கு ஒருநாள் மழைக்கே வெள்ளத்தில் மிதக்கிறது சென்னை என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வடகிழக்குப் பருவமழை தொடங்குகிறது என்று முன்கூட்டியே தெரிந்தும், முதல்வர் பழனிசாமியும், உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியும் காட்டிய அலட்சியத்தால், இன்றைக்கு ஒரு நாள் மழையைக் கூடத் தாங்க முடியாமல் சென்னை மாநகரத்தின் முக்கிய சாலைகள் எல்லாம் வெள்ளக்காடாகக் காட்சியளிக்கிறது. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் தத்தளித்துக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் தொடரப்போகும் வடகிழக்குப் பருவமழையால், சென்னை மீண்டும் ஒரு "டிசம்பர் 2015" வெள்ள அபாயத்தைச் சந்திக்கப் போகிறதோ என்ற அச்சம் மக்கள் அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது.

சென்னை மாநகருக்கு உள்ளாட்சித் தேர்தலை நடத்தியிருந்தால்- இப்போது குறைந்தபட்சம், கவுன்சிலர்களாவது மக்களோடு துணைநின்று, குறைகளைத் தீர்த்து வைப்பார்கள். அதற்கான வாய்ப்பையும் கெடுத்து விட்டு அமர்ந்திருக்கும் எடப்பாடி அரசு - அதிகாரிகளையும் ஊழலில் ஈடுபட வைக்கும் பயிற்சியை மட்டும் நன்கு அளித்து, சென்னை மாநகராட்சி நிர்வாகத்தையே கேலிக் கூத்தாக்கியுள்ளது கடும் கண்டனத்திற்குரியது. கனமழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால் - உடனடியாக மழை நீர் வடிவதற்கான அவசரகால நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தாழ்வான பகுதிகளில் வாழும் மக்களுக்குப் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள்- ஏழை எளியோர்க்கு உணவு - உள்ளிட்டவற்றிற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எடப்பாடி அரசால் முடியவில்லை என்றால்- தயவு செய்து பேரிடர் மீட்புப் படையை அழைத்து- முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிறுத்தி வைத்து, சென்னை மாநகரைக் காப்பாற்றப் போர்க்கால நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மீண்டும் ஒரு டிசம்பர் 2015 வெள்ளம் ஏற்பட்டு விடாமல் தடுக்கத் தேவையான அனைத்து முன்னேற்பாடுகளையும் அ.தி.மு.க. அரசு மிகுந்த எச்சரிக்கையுடன் விரிவான முறையில் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தும் அதே வேளையில், கழகத்தின் சென்னை மாநகர் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சிரமப்படும் மக்களுக்கு ஆங்காங்கே தேவையான அளவு உதவிட முன்வர வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என்று அதில் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com