

உளுந்தூர்பேட்டை,
உளுந்தூர்பேட்டையில் உள்ள ஏரியில் அரிய வகை நீர் நாய் முகாமிட்டுள்ளது.
உளுந்தூர்பேட்டை அடுத்த நகர் கிராமத்தில் பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரியில் கடந்த சில நாட்களாக திடீரென அரிய வகை நீர் நாய் ஒன்று முகாமிட்டுள்ளது. இது ஏரியில் உள்ள தண்ணீரில் சர்வ சாதாரணமாக நீந்தி விளையாடி உலா வருகிறது. மேலும் அங்குள்ள மீன்கள் மற்றும் ஆமைகளை லாவகமாக வேட்டையாடி தின்று பசியாறுகிறது. பொதுவாக வனப்பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் மட்டுமே அதிகம் தென்படும் இந்த அரிய வகை நீர் நாய், ஊருக்குள் உள்ள ஏரிக்கு எப்படி வந்தது? என அப்பகுதி மக்கள் வியப்புடன் பார்த்து செல்கின்றனர்.
மேலும் தண்ணீருக்குள் மூழ்கி வேகமாக நீந்திச் சென்று ஆமைகளையும், மீன்களையும் இந்த நீர் நாய் வேட்டையாடும் அழகை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தினமும் ஏரிக்கரைக்கு வந்து ஆச்சரியமாக வேடிக்கை பார்த்து வருகின்றனர். இதற்கிடையே இளைஞர் ஒருவர் தனது செல்போனில் நீர் நாய் ஆமையை வேட்டையாடுவதை வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இந்த அரிய வகை நீர் நாயை வனத்துறையினர் நேரில் பார்வையிட்டு, உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என அப்பகுதி மக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.