கடலூர் துறைமுகத்தில் மீன்கள் வாங்க குவிந்த பொதுமக்கள்

புரட்டாசி மாத 3-வது சனிக்கிழமை முடிவடைந்த நிலையில், நேற்று கடலூர் துறைமுகத்தில் மீன்கள் வாங்குவதற்காக பொதுமக்கள் குவிந்தனர்.
கடலூர் துறைமுகத்தில் மீன்கள் வாங்க குவிந்த பொதுமக்கள்
Published on

கடலூர் துறைமுகத்தில் இருந்து சோனாங்குப்பம், சொத்திக்குப்பம், அக்கரைக்கோரி, தேவனாம்பட்டினம், தாழங்குடா உள்ளிட்ட பல்வேறு கிராம மீனவர்கள், விசை மற்றும் பைபர் படகுகளில் ஆழ்கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகின்றனர். இவ்வாறு பிடித்து வரும் மீன்களை கடலூர் துறைமுகத்தில் கொண்டு வந்து விற்பனை செய்து வருகிறார்கள்.

இதனால் மீன்பிடி துறைமுகம் எப்போதும் பரபரப்பாக காணப்படும். இந்நிலையில் புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதம் என்பதால், பெருமாளை வழிபடும் மக்கள் அசைவத்தை தவிர்த்து சைவத்திற்கு மாறி இருந்தனர். சனிக்கிழமை தோறும் படையல் செய்து பெருமாளை வழிபட்டு வந்தனர். நேற்று முன்தினம் 3-வது சனிக்கிழமை வந்ததால் தளியல் போட்டு விரதத்தை முடித்தனர். அதன்பிறகு அவர்கள் அசைவ உணவை சாப்பிட தொடங்கி விட்டனர்.

பொதுமக்கள் குவிந்தனர்

அதன்படி விரதத்தை முடித்த மக்கள் ஞாயிற்றுக்கிழமையான நேற்று கடலூர் துறைமுகத்தில் மீன்கள் வாங்குவதற்காக குவிந்தனர். அவர்கள் தங்களுக்கு பிடித்தமான வஞ்சிரம், கானாங்கத்தை, சங்கரா, வவ்வால், பன்னி சாத்தான், கிளிச்சை, கனவா, பாறை உள்ளிட்ட பல்வேறு வகையான மீன்களை ஆர்வமுடன் வாங்கி சென்றனர்.

மொத்த வியாபாரிகளும் போட்டி போட்டு ஏலம் எடுத்து மீன்களை வாங்கி வாகனங்களில் கொண்டு சென்றனர். சிறிய மற்றும் தலைச்சுமை வியாபாரிகளும் மீன்களை ஏலம் எடுத்து விற்பனைக்காக கொண்டு சென்றதை பார்க்க முடிந்தது. இதனால் மீன்பிடி துறைமுகம் வழக்கம் போல் பரபரப்பாக இயங்கியது. இதேபோல் கோழி, ஆடு இறைச்சி கடைகளிலும் கூட்டம் அதிகமாக இருந்ததை பார்க்க முடிந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com