

சென்னை,
தமிழகத்தில் கொரோனா 2வது அலையின் தீவிரம் கடந்த சில வாரங்களாக குறைந்துள்ளது. எனினும், கொரோனா 3வது அலைக்கான சாத்தியம் உள்ளது என நிபுணர்களின் எச்சரிக்கையை முன்னிட்டு தடுப்பு நடவடிக்கைகளில் அரசு இறங்கியுள்ளது.
இதன் ஒரு பகுதியாக, சென்னையில் மெரினா உள்ளிட்ட கடற்கரைக்கு செல்ல போலீசார் அனுமதி அளிக்கமாட்டார்கள் என சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி செய்தியாளர்களுக்கு நேற்று அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார்.
அத்தியாவசிய தேவை இருந்தால் மட்டும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டும். திருமண நிகழ்ச்சிகளில் சாப்பிடும் போதும் சமூக இடைவெளியை முறையாக பின்பற்ற வேண்டும் என்றும் அவர் கூறினார்.
இந்த நிலையில், கொரோனா கட்டுப்பாடுகளை மீறி சென்னை மாநகராட்சியின் எச்சரிக்கை மற்றும் தடையை மீறி கடற்கரைகளில் மக்கள் அதிக அளவில் கூடியுள்ளனர். இதனால், தொற்று பரவும் ஆபத்து ஏற்பட்டு உள்ளது.
சென்னையில் மெரினா, பெசன்ட் நகர் போன்ற கடற்கரைகளில் காவல் துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், அதன் அருகில் இருக்கும் பட்டினப்பாக்கம் உள்ளிட்ட வேறு சில கடற்கரைகளுக்கு மக்கள் கூட்டம் குவிந்துள்ளது.
அவர்களில் பலரும் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது என்பதற்காக சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமலும், முக கவசம் அணியாமலும் அலட்சியத்துடன் இருந்தது தொற்று பரவலுக்கான சூழலை ஏற்படுத்தி உள்ளது.