

சென்னை,
சென்னை எழிலக வளாகத்தில் அமைந்துள்ள தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான குழு ஸ்டெர்லைட் ஆலை வேண்டுமா? வேண்டாமா? என்பது தொடர்பாக நேற்று முன்தினம் கருத்து கேட்பு கூட்டத்தை நடத்தியது. இந்த கூட்டத்தில், ஸ்டெர்லைட்டுக்கு எதிராக 4 லட்சம் மனுக்கள் அளிக்கப்பட்டன. அந்த மனுக்களில் ஆலையை மீண்டும் திறக்கக்கூடாது, நிரந்தரமாக மூட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
இந்தநிலையில் நேற்றும் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. இதில், தமிழக அரசு சார்பில் வக்கீல் சி.எஸ்.வைத்தியநாதன், ஸ்டெர்லைட் தரப்பில் வக்கீல் அரிமா சுந்தரம், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர் செயலாளர் சேகர், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் அர்ஜுனன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நேற்று நடைபெற்ற கூட்டத்தில் ஸ்டெர்லைட் தரப்பிலான வாதங்கள் மட்டுமே முன் வைக்கப்பட்டன. அப்போது, தமிழக அரசுக்கு எதிராக பல்வேறு கேள்விகள் தொடுக்கப்பட்டன.
விசாரணை முடிந்து வெளியே வந்த வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:-
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில், போலீசாரால் 13 பேர் சுட்டு கொலை செய்யப்படுவதற்கு முன் வரை வேதாந்தா நிறுவனத்துக்கு ஆதரவாகவே தமிழக அரசும், மாசு கட்டுப்பாட்டு வாரியமும் செயல்பட்டு வந்துள்ளது. அதன் விளைவாக, தற்போது ஸ்டெர்லைட் நிறுவனமானது தமிழக அரசு மீதும், மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் மீதும் குற்றச்சாட்டுகளை திருப்புகிறது.
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று மக்கள் கொந்தளிப்புடன் இருக்கிறார்கள். நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான இந்த குழு எல்லோருக்கும் வாய்ப்பு அளித்தது. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 4 லட்சம் பேர் மனு அளித்து உள்ளனர். எனவே இது குறித்து தூத்துக்குடி மக்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று தெரிவித்தேன். அப்போது நீதிபதி அதனை ஆர்வமாக கேட்டு அறிந்தார். பொது வாக்கெடுப்பு நடத்தினால் 99 சதவீத மக்கள் ஸ்டெர்லைட் ஆலை வேண்டாம் என்று தான் கூறுவார்கள்.
மீண்டும் இந்த மாதம் 27, 28-ந் தேதிகளில் விசாரணை தொடரும் என்றும், ஒருவேளை விசாரணை முடியாவிட்டால், 29-ந் தேதியும் விசாரணை எடுத்துக் கொள்ளப்படும் என்றும் நீதிபதி கூறியிருக்கிறார்.
ஸ்டெர்லைட் ஆலையில் வேலை பார்த்த கார்த்தீபன் என்ற வாலிபர் கையை இழந்து உள்ளார். அவருக்கு ரூ.30 லட்சம் வரை இழப்பீடு தர தயாராக இருப்பதாக ஸ்டெர்லைட் தரப்பில் தெரிவித்தார்கள். ஆனால், அவருக்கு எந்த விதமான நிதியும் கொடுக்கப்படவில்லை. இதனை அடுத்த விசாரணையின் போது நாங்கள் வலியுறுத்தி கேட்க உள்ளோம்.
கோர்ட்டில் வழக்கு இருக்கும் போதே ஆலையை திறப்பேன் என்று வேதாந்தா நிறுவன உரிமையாளர் கூறியிருக்கிறார். இது குறித்து நான் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
ஸ்டெர்லைட் ஆலையில் நடைபெற்ற விபத்தில் கையை இழந்த தூத்துக்குடி சில்வர்புரத்தை சேர்ந்த கார்த்தீபன் கூறுகையில்,
ஸ்டெர்லைட் ஆலையில் வேலை பார்த்த போது ஏற்பட்ட விபத்தில் எனது கை துண்டிக்கப்பட்டது. இதில் என்னுடன் பேச்சுவார்த்தை நடத்திய ஆலை நிர்வாகத்தினர், இழப்பீடு தருவதாகக்கூறி அலைக்கழித்து ஏமாற்றினரே தவிர எனக்கு எந்த இழப்பீடும் வழங்கவில்லை. இப்போது ரூ.30 லட்சம் வரை இழப்பீடு தருவதாக கூறியிருக்கிறார்கள் என்றார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் அர்ஜுனன் கூறியதாவது:-
ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து அபாயகரமான கழிவுகளை அகற்றுவதற்கான அனுமதி 2013-ம் ஆண்டோடு முடிந்துவிட்டது. தற்போது 2018-ம் ஆண்டு வரை ஸ்டெர்லைட் ஆலை எந்த விதியின் கீழ் இயங்கியது என்பது கேள்விக்குறியதாக உள்ளது.
தூத்துக்குடியில் உள்ள உப்பளங்களினால் நிலத்தடி நீர் மாசுபடுவதாக ஸ்டெர்லைட் தரப்பினர் தவறான வாதங்களை முன் வைத்து இருக்கிறார்கள். இது குறித்து எங்கள் தரப்பு வாதங்களை 27, 28-ந் தேதி நடைபெறக்கூடிய ஆய்வுக் கூட்டத்தில் பதிவு செய்வோம். இவ்வாறு அவர் கூறினார்.