நாளை முழு ஊரடங்கு: காய்கறி, இறைச்சி, மளிகைப்பொருட்கள் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இதையொட்டி காய்கறி, இறைச்சி மற்றும் மளிகைப்பொருட்கள் வாங்க மக்கள் ஆர்வம் காட்டினர். அதற்காக கடைகளில் கூட்டமாக குவிந்தனர்.
நாளை முழு ஊரடங்கு: காய்கறி, இறைச்சி, மளிகைப்பொருட்கள் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்
Published on

மளிகை கடைகளில்...

தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாளை முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இதையொட்டி கடைகள் அடைக்கப்படும் என்பதால் இன்றைய தினமே மக்கள் தேவையான பொருட்களை வாங்கி வைத்துக்கொண்டனர்.

சென்னையிலும் இன்று மளிகைக்கடைகளில் மக்கள் கூட்டம் நிறைந்து காணப்பட்டது. சமூக இடைவெளியை மறந்து கடைகளில் திரண்டனர். இதனால் புரசைவாக்கம், அண்ணாநகர், தியாகராயநகர், பாரிமுனை, கொத்தவால்சாவடி, வண்ணாரப்பேட்டை, பெரம்பூர், வியாசர்பாடி போன்ற கடைவீதிகள் நிறைந்த பகுதிகளில் இன்று மக்கள் கூட்டம் காணப்பட்டது. மறுநாளுக்கு தேவையான மளிகைப்பொருட்களை வாங்கி இருப்பு வைத்துக்கொண்டனர்.

மீன் மார்க்கெட்டுகளில்...

அதேபோல இறைச்சிக் கடைகளிலும் இன்று மக்கள் கூட்டம் மிகுதியாக இருந்தது. குறிப்பாக சென்னை காசிமேடு மீன் மார்க்கெட்டில் ஏதோ இனிமேல் கிடைக்கவே கிடைக்காது என்பதைப் போல மீன்கள் வாங்க மக்கள் குவிந்தனர். இதனால் கடற்கரை வளாகம் முழுவதும் மனித தலைகளாகவே காட்சியளித்தது.

வானகரம் உள்பட மீன் மார்கெட்டுகளில் வியாபாரிகள் தடுப்புகள் அமைத்து பொதுமக்களை மார்க்கெட்டில் நுழைய அனுமதித்தனர். முக கவசம் அணிந்தவர்கள் மட்டுமே மீன்கள் வாங்க அனுமதிக்கப்பட்டனர். முக கவசம் இல்லாமல் வந்தவர்கள் திருப்பி அனுப்பப்பட்டதால் லேசான சலசலப்பும் எழுந்தது. சிந்தாதிரிப்பேட்டை, திரு.வி.க.நகர், சைதாப்பேட்டை, திருவான்மியூர், பட்டினப்பாக்கம், காவாங்கரை போன்ற மீன் மார்கெட்டுகளில் மக்கள் கூட்டம் திரண்டது.

காய்கறி-பழங்கள் வாங்க ஆர்வம்

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டிலும் இன்று மக்கள் கூட்டம் மிகுதியாக காணப்பட்டது. காய்கறி, பழங்கள் வாங்க மக்கள் ஆர்வம் காட்டினர். அதேவேளை பூக்களையும் தேவையான அளவு வாங்கிச் சென்றனர். இதனால் கோயம்பேடு மார்க்கெட்டில் வழக்கத்தைவிட நெரிசல் அதிகம் காணப்பட்டது. இதுகுறித்து கோயம்பேடு மார்க்கெட் காய்கறி வியாபாரிகள் சங்க தலைவர் அப்துல்காதர் கூறுகையில், கடந்த வாரத்தைக் காட்டிலும் இந்த வாரம் காய்கறி விலை ரூ.5 முதல் ரூ.10 வரை உயர்ந்திருக்கிறது. மற்றபடி பெரிய அளவில் தாக்கம் இல்லை. நாளை விடுமுறை என்பதால் மக்கள் முன்கூட்டியே தேவையான காய்கறியை வாங்கிச் செல்கிறார்கள் என்றார்.

வியாபாரிகள் கவலை

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கோயம்பேடு மார்க்கெட் வளாகம் நள்ளிரவு முதல் பகல் 1 மணி வரை மட்டுமே செயல்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதுகுறித்து கோயம்பேடு மார்க்கெட் அண்ணா அனைத்து வியாபாரிகள் பொதுநல சங்க தலைவர் பழக்கடை கே.ஜெயராமன் கூறுகையில், ஏற்கனவே மார்க்கெட்டில் எதிர்பார்த்த விற்பனை நடக்காமல் வியாபாரிகள் பெரும் சிரமத்தைச் சந்தித்து வருகிறோம். இப்போது இந்த நேரக் குறைப்பு நடவடிக்கை, இரவு நேர ஊரடங்கு எங்களை மேலும் பாதாளத்தில் தள்ளியதை போன்றுள்ளது. வியாபாரிகள் நலனை கருதி உரிய நிவாரணம் வழங்க அரசும், சி.எம்.டி.ஏ. நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com