

திண்டுக்கல்,
நில அதிர்வு ஏற்பட்டதாக மக்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே ஆயக்குடி பேரூராட்சியில் பழைய ஆயக்குடி, புதுஆயக்குடி ஆகிய பகுதிகள் உள்ளன. இங்கு 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், நேற்று இரவு 9.30 மணி அளவில் ஆயக்குடி பகுதியில் திடீரென பயங்கர வெடிச் சத்தம் கேட்டது. மேலும், வீடுகளில் இருந்த பொருட்களும் அதிர்ந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் நில அதிர்வு என மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த ஆயக்குடி போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று பொதுமக்களிடம் விசாரணை நடத்தினர். இதற்கிடையே, ஆயக்குடி மற்றும் சுற்றுவட்டார கிராமப் பகுதிகளில் நில அதிர்வு ஏற்பட்டதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது. இதனால் இரவில் தூங்குவதற்குக்கூட அச்சமடைந்த மக்கள், ஆங்காங்கே வீதிகளில் வந்து நின்றதால் பரபரப்பு நிலவியது