அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணியை தமிழக மக்கள் நம்ப தயாராக இல்லை - உதயநிதி ஸ்டாலின்

தமிழகத்தின் வளர்ச்சிக்கு மத்திய பா.ஜ.க. அரசு முட்டுக்கட்டை போட நினைக்கிறது என துணை முதல்-அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார்.
அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணியை தமிழக மக்கள் நம்ப தயாராக இல்லை - உதயநிதி ஸ்டாலின்
Published on

தஞ்சை,

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் இன்று காலை நடைபெற்ற நிகழ்ச்சியில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு முன்னாள் முதல்-அமைச்சர்கள் அறிஞர் அண்ணா, கருணாநிதி சிலைகளை திறந்து வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:-

இன்றைக்கு இந்த பட்டுக்கோட்டை நகரத்திலே இந்த அற்புதமான வாய்ப்பு கிடைத்ததற்கு உண்மையிலேயே நான் மிகுந்த பெருமை அடைகின்றேன், மகிழ்ச்சி அடைகின்றேன். கடந்த 10 நாட்களுக்கு முன்பு இதே தஞ்சை செங்கிப்பட்டியிலே முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி சிலையை திறந்து வைக்கின்ற வாய்ப்பையும் பெற்றேன். தஞ்சை மாவட்டம் தி.மு.க.வின் கோட்டை என்று சொன்னால் அது மிகையாகாது. இந்த டெல்டா பகுதி கருணாநிதி மனசுக்கும் சரி, அண்ணாவுடைய மனசுக்கும் மிகுந்த நெருக்கமான ஒரு பகுதி. நம்முடைய முதல்-அமைச்சர் 'நானும் ஒரு டெல்டாக்காரன்' தான் என்று அடிக்கடி பெருமையாக சொல்வார்.

டெல்டா மாவட்டத்தில் கருணாநிதி செல்லாத இடங்களே இல்லை. திராவிட இயக்கத்துடைய போர்ப்படை தளபதியாக இருந்த பட்டுக்கோட்டை அழகிரியை தந்த மண் இந்த பட்டுக்கோட்டை மண். பட்டுக்கோட்டை அழகிரியின் பேச்சுகளையெல்லாம் கேட்டு திராவிட இயக்கத்திற்கு வந்தவர் தான் கருணாநிதி. கருணாநிதிக்கு 'கலைஞர்' என்ற அந்த பட்டப் பெயரை கொடுத்ததே. பட்டுக்கோட்டை அழகிரி தான். அண்ணா, கருணாநிதி சிலைகளை தமிழ்நாடு முழுவதும் நாம் திறக்கிறோம் என்றால் அவர்களுடைய கொள்கைகளை, லட்சியங்களை தமிழ்நாடு முழுக்க கொண்டு போய் சேர்க்கிறோம் என்று அர்த்தம். இன்றைய நவீன தமிழ்நாட்டை உருவாக்கியவர் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி. அவரது வழியில் நமது முதல்-அமைச்சர் திராவிட மாடல் ஆட்சியை நடத்தி வருகிறார்.

ஆட்சிக்கு வந்ததும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் போட்ட முதல் கையெழுத்து மகளிருக்கான அந்த 'விடியல் பயண திட்டம்'. இதன் மூலம் தினமும் ஏராளமான மகளிர் பயனடைந்து வருகின்றனர். அதுமட்டுமின்றி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம், தமிழ் புதல்வன் திட்டம், புதுமைப்பெண் திட்டம், விலையில்லா மடிக்கணினி திட்டம் என்று பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் முதல்-அமைச்சர். தமிழ்நாட்டில் 1.31 கோடி மகளிர் மாதம் தோறும் ரூ.1,000 உரிமைத்தொகை பெற்று வருகின்றனர். சட்டமன்ற தேர்தலை காரணம் காட்டி மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை தடுத்து நிறுத்த சதி நடைபெறுவதை உணர்ந்து தான் முதல்-அமைச்சர் முன்பணமாகவே கோடைக்கால சிறப்பு நிதியையும் சேர்த்து ரூ.5,000 ஆயிரம் வழங்கி உள்ளார்.

பொங்கல் பண்டிகைக்கும் ரூ.3,000 கொடுத்தார். மேலும் மீண்டும் தி.மு.க. ஆட்சி அமைந்ததும் மகளிர் உரிமைத்தொகையை ரூ.2,000 உயர்த்தி கொடுப்பேன் என வாக்குறுதி அளித்துள்ளார். இப்படி தமிழ்நாட்டு மக்களுக்காக திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறார் முதல்-அமைச்சர். இதனால் தான் நமது மாநிலம் நம்பர் ஒன் மாநிலமாக உள்ளது. தமிழகத்தின் வளர்ச்சிக்கு மத்திய பா.ஜ.க. அரசு முட்டுக்கட்டை போட நினைக்கிறது. நமக்கான நிதியை தர மறுக்கிறது. மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்படுகிறது.

ஆனால் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இதைப்பற்றி எல்லாம் மத்திய பா.ஜ.க. அரசிடம் கேள்வி கேட்க மறுக்கிறார். அவர் மத்திய அரசுக்கு அடிமையாக இருக்கிறார். அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. கூட்டணியை தமிழக மக்கள் நம்ப தயாராக இல்லை. எனவே 200-க்கும் மேற்பட்ட தொகுதிகள் நமது கூட்டணி வென்று மீண்டும் தி.மு.க. ஆட்சி அமைவது உறுதி. அதற்கு கட்சியினர் வீடு வீடாக சென்று நமது ஆட்சியின் சாதனைகளை மக்களிடம் எடுத்து கூறி வாக்குகள் சேகரிக்க வேண்டும். அடுத்து வருகிற 50 நாட்கள் நாம் களத்தில் இறங்கி மக்களை சந்தித்து பிரசாரம் செய்ய வேண்டும். அதற்கு நாம் அனைவரும் அண்ணா, கருணாநிதி சிலைகள் முன்பு நின்று இன்று சபதம் ஏற்போம்.

இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com