அரசு மீது மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்

மக்கள் குறைகளை உடனுக்குடன் தீர்த்து அரசு மீது மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலெக்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
அரசு மீது மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்
Published on

சென்னை,

சென்னை தலைமைச் செயலகத்தில் மாவட்ட கலெக்டர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகளின் 2-ம் நாள் மாநாடு நேற்று தொடர்ந்து நடந்தது. நேற்றைய கூட்டம் மாவட்ட கலெக்டர்களுக்கு மட்டும் பிரத்யேகமாக நடத்தப்பட்டது. காலையில் தொடங்கி மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடக்க உரையும், இறுதியில் நிறைவுரையும் ஆற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்யப்பட்டதன் பொன்விழா ஆண்டையொட்டி மாவட்ட கலெக்டர்கள் விளையாட்டு போட்டிகள், கட்டுரை போட்டிகள், பேச்சு போட்டிகள் என பல்வேறு நிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்த வேண்டும். இதன் முத்தாய்ப்பாக சென்னையில் ஒரு மாபெரும் விழா நடத்தப்பட உள்ளது.

தமிழக அரசின் அனைத்து திட்டங்களையும் மக்களுக்கு கொண்டு சேர்ப்பதில் முழு முனைப்புடன் கலெக்டர்கள் கண்காணிக்க வேண்டும். வேளாண்மைக்கான திட்டங்களைப்பற்றி விவசாயிகள் முழுமையாக தெரிந்துகொண்டு பயன்பெற நீங்கள் வழிகாட்ட வேண்டும். விவசாயம் சார்ந்த விலையில்லா கறவை மாடுகள், ஆடுகள் வழங்கும் திட்டம், கோழிகள் வளர்ப்பு உள்ளிட்ட திட்டங்களை முழு முனைப்புடன் செயல்படுத்த வேண்டும்.

வேளாண் பயிர்களுக்கு நல்ல விலை கிடைக்க உழவர் உற்பத்தியாளர்கள் நிறுவனங்களை பெருமளவில் உங்கள் மாவட்டத்தில் உருவாக்கிட வேண்டும். நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகள் இன்றியும், தூர்வாரியும் அவற்றின் முழு கொள்ளளவை பராமரிக்க வேண்டும். கட்டணமில்லா வண்டல் மண் வழங்கும் திட்டத்தை சிறப்பாகச் செயல்படுத்த வேண்டும். அந்தந்த ஆயக்கட்டுப் பகுதிகளில் உள்ள விவசாயிகளைக் கொண்டு பாசன விவசாயிகள் சங்கங்கள் அமைக்கப்பட வேண்டும்.

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 70-வது பிறந்தநாளையொட்டி, 70 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை பிரதமர் தொடங்கியுள்ளார். இதற்கு தகுந்த இடங்களைத் தேர்வுசெய்து தொடர் பராமரிப்பின் மூலம் பசுமைப் போர்வையை அதிகப்படுத்த வேண்டும்.

மாணவர் சேர்க்கை விகிதத்தை அதிகரிக்க வேண்டும். இடைநிற்றல் அறவே தடுக்கப்பட வேண்டும். தேர்ச்சி விகிதம் அதிகரிக்க வேண்டும். மாணவர்களிடையே தன்னம்பிக்கையை வளர்க்க பள்ளிக்கல்வி துறையுடன் இணைந்து மனவள ஆலோசனைகள் வழங்க கலெக்டர்கள் ஏற்பாடு செய்ய வேண்டும்.

பெண்களுக்கான திட்டங்களின் பணிகளையும், மகளிர் சுயஉதவி குழுக்களின் செயல்பாடுகளையும் தொடர்ந்து கண்காணித்து இடர்பாடுகளை களையவேண்டும். ரேஷன் கடைகள் மற்றும் உணவுப்பொருள் கிட்டங்கிகளில் தொடர் ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும்.

அம்மா உணவகங்கள் தொடர்ந்து சிறப்பான முறையில் செயல்படுவதை உறுதி செய்யவேண்டும். மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு சற்றும் குறைவில்லாமல் உங்களது பணி அமையவேண்டும். கோடைக்காலத்திலும் குடிநீர் பிரச்சினை இல்லை என்ற நிலையை நீங்கள் உறுதி செய்யவேண்டும். பொதுசேவை மையங்கள் செம்மையாக செயல்பட்டு வருகிறதா என்பதை ஆய்வு செய்யவேண்டும்.

உள்கட்டமைப்பு வசதிகளுக்கு தேவைப்படும் நிலங்களுக்கான நில எடுப்பு பணிகள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் மேற்கொள்ளப்பட வேண்டும். இலவச வீட்டுமனை பட்டாக்கள் மற்றும் பட்டா மாறுதல் உத்தரவுகள் வழங்கும்போது அனைத்து நில ஆவணங்களிலும் தக்க பதிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பதை மாவட்ட வருவாய் அலுவலர்கள் உறுதிசெய்ய வேண்டும். இதை கலெக்டர்கள் தணிக்கை செய்திட வேண்டும்.

பல்வேறு துறைகளின் மூலமாக சான்றிதழ்களை வழங்குவதில் தவறுகள் நடந்தால், உரிய அலுவலர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கோப்புகள் தேங்காதபடி விரைவாக அவற்றிற்கு தீர்வுகாண வேண்டும். பொதுமக்கள் மனுக்களின் மீதும் தனி கவனம் செலுத்தி நடவடிக்கை எடுத்து அரசு மீது மக்களுக்கு நன்மதிப்பையும், நம்பிக்கையையும் நீங்கள் ஏற்படுத்த வேண்டும். உங்களுடைய அளவில் தீர்க்க முடியாத பிரச்சினைகளை அரசின் பார்வைக்கு கொண்டுவர வேண்டும்.

பல்வேறு துறைகளுக்கான வாராந்திர, மாத சீராய்வுகள் மிக அவசியம் என்றாலும், மாவட்ட கலெக்டர்கள் தவறாமல் களஆய்வு செய்யவேண்டும். குடிநீர் வழங்குதல், வீட்டுமனைப் பட்டா வழங்குதல், ஓய்வூதியம் வழங்குதல், திருமண நிதியுதவித் திட்டம் போன்றவற்றை மக்களுக்கு கொண்டு செல்லுவதில் கலெக்டர்கள் தனிக்கவனம் செலுத்த வேண்டும்.

அரசுத் திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்தி அரசுக்கும் நற்பெயரினை பெற்றுத்தர வேண்டும்.

இந்த கூட்டத்தில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மூத்த அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பங்கேற்றனர்.

இன்று (புதன்கிழமை) மாநாட்டின் இறுதிக் கூட்டம் நடக்கிறது. இதில் மண்டல போலீஸ் ஐ.ஜி.க்கள், சரக டி.ஐ.ஜி.க்கள், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் உள்பட உயர் போலீஸ் அதிகாரிகள் பங்கேற்கின்றனர். பின்னர் மாலையில் மீண்டும் கலெக்டர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் ஒருங்கிணைந்த கூட்டம் நடக்கிறது.

அப்போது சிறப்பாக செயல்பட்ட கலெக்டர்கள், போலீஸ் அதிகாரிகளுக்கு விருதுகள் வழங்கப்படும். மாவட்ட வாரியாக திட்டங்கள் குறித்த புதிய அறிவிப்புகள் வெளியிடப்படும். அதைத் தொடர்ந்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிறைவுரையாற்றி 3 நாள் மாநாட்டை முடித்துவைப்பார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com