கோவிலை இடிக்க கிராம மக்கள் எதிர்ப்பு

ஒரத்தநாடு அருகே கோவிலை இடிக்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, மண்எண்ணெய் கேனுடன் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது
கோவிலை இடிக்க கிராம மக்கள் எதிர்ப்பு
Published on

ஒரத்தநாடு அருகே கோவிலை இடிக்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, மண்எண்ணெய் கேனுடன் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது

ஏரி ஆக்கிரமிப்புகள் அகற்றம்

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தாலுகாவை சேர்ந்த சில்லத்தூர் கிராமத்தில் பெரிய ஏரி உள்ளது. அரசு பொதுப்பணித் துறையின் பராமரிப்பில் இருந்து வரும் இந்த ஏரியின் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி அந்த கிராமத்தை சேர்ந்த ஒருவர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கினை விசாரித்த கோர்ட்டு சில்லத்தூர் பெரிய ஏரியின் ஆக்கிரமிப்புகளை அகற்றி நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கடந்த சில வாரங்களாக சில்லத்தூர் பெரிய ஏரியின் வயல் பகுதி ஆக்கிரமிப்புகளை பொக்லின் எந்திரம் கொண்டு அகற்றும் பணியினை தொடங்கினர்.இதன் ஒரு பகுதியாக நேற்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் வருவாய்த் துறை அதிகாரிகளின் முன்னிலையில், போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பு வீடுகள் உள்ளிட்டவற்றை பொக்லின் எந்திரம் கொண்டு அகற்றினர்

கோவிலை இடிக்க எதிர்ப்பு

இதனைத் தொடர்ந்து பெரிய ஏரியின் கரை பகுதியில் கட்டப்பட்டுள்ள இடும்பன் கோவிலை பொக்லின் எந்திரம் கொண்டு இடிக்கும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். இதற்கு கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பெண்கள் உள்ளிட்டவர்கள் சாலையின் குறுக்கே அமர்ந்து பொக்லின் வாகனங்களை கோவில் பகுதிக்குள் அனுமதிக்க மறுத்தனர். அப்போது கிராம மக்கள் அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மண்எண்ணெய் கேனுடன்...

இந்த வேளையில் பெண்கள் உள்ளிட்ட சிலர் கையில் மண்எண்ணெய் கேனுடன் அங்கு திரண்டு, கோவிலை இடிக்க விடமாட்டோம் என்று கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கோவிலை இடிக்க கூடாது எனக்கோரி கிராம மக்கள் சார்பில் வழக்கு தொடர்ந்து இருப்பதாகவும், இதனால் அதிகாரிகள் கால அவகாசம் தரவேண்டும் என்று கிராம மக்கள் அதிகாரிகளிடத்தில் முறையிட்டனர். இதனைத் தொடர்ந்து அதிகாரிகள் கோவிலை இடிக்காமல் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com