

சென்னை,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை பாஜக வெளியிட்டுள்ளது. சமூக அமைதியும், மத நல்லிணக்கச் சூழலும் நிலவி வரும் தமிழ்நாட்டில், வாக்கு வங்கி அரசியலுக்காக, பெரும்பான்மை மதவெறி அரசியலை தீவிரமாக முன்னெடுக்கும் நோக்கில் பாஜக தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
ஆர்எஸ்எஸ்-ன் இந்துத்துவா அரசியலை ஏற்று செயல்படும் அதன் அரசியல் பிரிவான பாஜக, தேர்தல் ஆதாயத்திற்காக மக்களை மத ரீதியாக பிளவுபடுத்த தொடர்ந்து முயன்று வருகின்றது. மக்களின் இயல்பான ஆன்மீக நம்பிக்கைகளையும், உணர்வுகளையும், மதவெறி அரசியலுக்கு அணிதிரட்டி, மாநில அரசு அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக பாஜக தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
சிறுபான்மை மக்களுக்கு எதிராக, குறிப்பாக முஸ்லீம்களுக்கு எதிராக நச்சுக் கருத்துகளையும், வெறுப்புணர்வையும் திட்டமிட்டு பரப்புகிறது. சிறுபான்மை மக்களின் வழிபாட்டுத் தலங்கள் குறித்து உண்மைக்கு மாறான, தவறான தகவல்களை வெளியிட்டு, வரலாற்று புரட்டுக் கதைகளை கூறி, திரும்பத் திரும்ப கூறும் புனைவுச் செய்தியை நிலைநாட்ட, நேரடி மோதல்களில் ஈடுபவதை வழக்கமாகக் கொண்டுள்ளது.
கடந்த 1992 டிசம்பர் 6-ம் தேதி, அயோத்தியில் பாபர் மசூதியை இடித்து தரைமட்டமாக்கிய சங் பரிவார் அமைப்புகள் அரசியல் ஆதாயம் பெற்றன. இதே வழிமுறையில் தமிழ்நாட்டில் திருப்பரங்குன்றம் மலையை குறி வைத்துள்ளன. மலையில் காலம் காலமாக இருந்து வரும் தர்காவின் மிக அருகில், பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் நடப்பட்ட சர்வே கல் தூணை, தீபத்தூண் என சித்தரித்துக் கூறி, அதில் தீபம் ஏற்ற மதவெறி சக்திகள் முயல்கின்றன.
திருப்பரங்குன்றத்தை முன்னிறுத்தி தமிழ்நாட்டில் மதக்கலவரத்தை தூண்ட சங்பரிவார் அமைப்புகள் மேற்கொள்ளும் முயற்சியை அப்பகுதி மக்கள் முறியடித்துள்ளனர். இந்த மதவெறி சக்திகளின் சூழ்ச்சியை, மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் அரசியல் சதியை, தமிழ்நாடு அரசும், நிர்வாகமும் வெற்றிகரமாக முறியடித்து, சட்டத்தின் ஆட்சியை நிலை நிறுத்தியிருப்பதை இந்திய மக்கள் அனைவருமே பாராட்டி வருகின்றனர்.
இதுதொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டு விசாரணையில் இருக்கிறது. இந்த நிலையில் வழிபாட்டுத் தலங்கள் சட்டம் -1991க்கு எதிராகவும், அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராகவும், மதத்தையும், மத உணர்வுகளையும் தேர்தல் பரப்புரையில் பயன்படுத்தக் கூடாது என்ற மாதிரி தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு எதிராகவும், திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றும் பிரச்சனையை, பாஜக தேர்தல் அறிக்கையில் முன் வைத்திருப்பதை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.
இந்தியத் தேர்தல் ஆணையம், பாஜகவின் தேர்தல் அறிக்கை மீது தலையிட்டு, மத உணர்வுகளை தூண்டும் பகுதிகளை நீக்க வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது. தமிழ்நாட்டில் வகுப்புவாத அரசியலை முன்னெடுக்கும் பாஜகவையும், அதற்கு துணை போகும் அஇஅதிமுக, உள்ளிட்ட கட்சிகளின் சந்தர்ப்பவாதக் கூட்டணியையும் தமிழ்நாட்டின் மக்கள் முற்றாகப் புறக்கணிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறது. வரும் 23.04.2026 அன்று நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு பேராதரவு தந்து, வகுப்புவாத பாசிச சக்திகளை தோற்கடிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.