குண்டும் குழியுமான சாலையால் பொதுமக்கள் கடும் அவதி

கணியம்பாடி அருகே உள்ள கிருஷ்ணாபுரம் பகுதியில் கற்கள் பெயர்ந்து, குண்டு குழியுமான சாலையால் பொதுமக்கள் கடும் அவதி அடைகின்றனர்.
குண்டும் குழியுமான சாலையால் பொதுமக்கள் கடும் அவதி
Published on

வேப்பம்பட்டு ஊராட்சி

வேலூர் மாவட்டம், கணியம்பாடி ஒன்றியத்துக்கு உட்பட்ட வேப்பம்பட்டு ஊராட்சி, கிருஷ்ணாவரம் பகுதியில் சுமார் 150-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. அங்கு 1,200-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஊராட்சி நிர்வாகம் சார்பில் புதிதாக தார் சாலை அமைக்கப்பட்டது. முறையான பராமரிப்பு இல்லாததால், இந்த தார் சாலை தற்போது சிதிலமடைந்து, குண்டும், குழியுமாகி போக்குவரத்துக்கு லாயக்காற்ற நிலையில் உள்ளது. இந்த சாலையை பயன்படுத்தும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.

இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் யாருக்காவது உடல்நலம் பாதிக்கப்பட்டால், அவர்களை மருத்துவமனைக்கு வாகனங்களில் அழைத்துச்செல்லும்போது மிகுந்த சிரமத்துடனேயே செல்ல வேண்டியுள்ளதாக பொதுமக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

விஷ பூச்சிகள்

சேதமடைந்த இந்த சாலையை தவிர கிருஷ்ணாபுரம் பகுதி மக்கள் சென்றுவர மாற்றுச் சாலை எதுவும் இல்லை. அதேபோல் சாலை ஓரம் முட்புதர்கள் அதிக அளவில் வளர்ந்து கிடப்பதால் இரவு நேரங்களில் பாம்பு உள்ளிட்ட விஷ பூச்சிகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இதனால் அந்த சாலையில் செல்வோர் மிகவும் அச்சத்துடன் பயணிக்கும் சூழல் உள்ளது.

நடந்து செல்லக்கூட முடியாத அளவிற்கு சாலைகள் மோசமாக உள்ள நிலையில், அவசரத்திற்கு ஆம்புலன்ஸ் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வழியே செல்லும் வாகனங்கள் அடிக்கடி பழுதாகி நின்றுவிடுகின்றன. மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகள், வேலைக்கு செல்வோர் மற்றும் பள்ளி குழந்தைகள் பள்ளிக்கு உரிய நேரத்தில் செல்ல முடியாமல் பரிதவிக்கின்றனர்.

சீரமைக்க வேண்டும்

இது குறித்து அந்தப் பகுதியை சேர்ந்த பன்னீர்செல்வம் கூறியதாவது:-

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட தார் சாலை அடிக்கடி பெய்யும் தொடர்மழையால் பழுதடைந்து விட்டது. ஜல்லி கற்கள் பெயர்ந்து கரடு முரடான சாலையில் வாகனங்களில் செல்ல மிகவும் சிரமமாக உள்ளது.

அவசர நேரத்தில் செல்லும்போது வாகனங்கள் பஞ்சர் ஆகி நடு வழியில் நின்று விடுவதால் குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல முடியவில்லை. இந்த சாலையை சீரமைக்க பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே சாலையை சீரமைக்க அதிகாரிகள் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

காயங்கள்

கிருஷ்ணவரம் கிராமத்தை சேர்ந்த அருணாச்சலம் கூறியதாவது:-

கிருஷ்ணாவரத்தில் அரசு பள்ளி, மருத்துவமனை உள்ளிட்ட வசதிகள் இல்லை. நாங்கள் ரேஷன் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வாங்க சுமார் 2 கிலோமீட்டர் தொலைவு சேதமடைந்துள்ள இந்த சாலை வழியாகத்தான் செல்ல வேண்டும்.

பஸ் போக்குவரத்து இல்லாததால் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் மற்றும் நோயாளிகள் நடந்துதான் வேப்பம்பட்டு பஸ் நிறுத்தத்திற்கு சென்று, அங்கிருந்து பஸ் மூலம் செல்கின்றனர்.

தெருவிளக்குகள் கூட அமைக்கப்படாததால் இரவு நேரத்தில் குண்டும் குழியுமான சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் தடுமாறி கீழே விழுந்து காயங்கள் ஏற்படும் நிலை தொடர்ந்து காணப்படுகிறது. பழுதடைந்து கிடக்கும் இந்த சாலையை சீரமைத்தால் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com