வடமாநிலங்களில் மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புகிறார்கள்-முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் பேச்சு

வடமாநிலங்களில் மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புகிறார்கள் என்று முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கூறினார்.
வடமாநிலங்களில் மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புகிறார்கள்-முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் பேச்சு
Published on

காரைக்குடி, 

வடமாநிலங்களில் மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புகிறார்கள் என்று முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கூறினார்.

இளைஞர் காங்கிரஸ் கூட்டம்

சிவகங்கை மாவட்ட இளைஞர் காங்கிரஸ் கட்சி கூட்டம் காரைக்குடியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் பிரவீன்குமார் தலைமை தாங்கினார். சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திசிதம்பரம் முன்னிலை வகித்தார். மாங்குடி எம்.எல்.ஏ. வரவேற்றார்.

கூட்டத்தில் முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் கலந்துகொண்டு பேசியதாவது:-

சமீபத்தில் நடந்து முடிந்த கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதன் மூலம் மத்தியிலும் வருகிற நாடாளுமன்ற தேர்தலிலும் மிகப்பெரிய மாற்றம் இருக்கும் என புத்துணர்வு மக்களுக்கு மட்டுமின்றி கட்சியினருக்கும் வந்துள்ளது. இதை நாம் உணர்ந்து செயல்பட வேண்டும். இனிவர உள்ள 5 மாநில சட்டசபை தேர்தலில் 5 மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி வந்தால் போதுமானது.

இரங்கல் கூட தெரிவிக்கவில்லை

அடுத்த முறையும் நரேந்திரமோடி மீண்டும் பிரதமராக வந்தால் நாட்டிற்கு மிகப்பெரிய ஆபத்தும் வந்துவிடும். உதாரணமாக குஜராத் மாநிலத்தில் மிகப்பெரிய புயல் பாதிப்பு வரும் என்ற அறிவிப்பு வந்ததும் அதற்கு முன்னதாகவே பிரதமர் அந்த மாநிலத்தில் உள்ள உயர்அதிகாரிகளிடம் நேரடி விசாரணை நடத்தி இந்த புயல் தாக்கத்தில் இருந்து மக்களை எவ்வாறு பாதுகாப்பது என்ற ஆலோசனை நடத்தினார்.அதன் பின்னர் பாதிப்பில் இருந்து மக்களை காப்பாற்றினார்.

ஆனால் மணிப்பூர் மாநிலத்தில் 53 நாட்களாக கலவரம் நடந்து வருகிறது. இந்த கலவரத்தில் அதிகாரப்பூர்வமாக 120 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர். ஆனால் இதுவரை பிரதமர் இந்த கலவரத்திற்கு அனுதாபம் தெரிவித்து பலியானவர்களின் குடும்பத்திற்கு ஒரு இரங்கல் கூட தெரிவிக்கவில்லை. இதில் இருந்து கட்சிக்கு சாதகமாக உள்ள மாநிலத்திற்கு மட்டும் பெரும் உதவியை பிரதமர் செய்கிறார்.

இந்நிலையில் மீண்டும் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் இந்திய சாசனத்தையே திருப்பி எழுதி விடுவார்கள். தமிழகத்தில் பா.ஜ.க ஒருபோதும் கால் ஊன்ற முடியாது என பல கூட்டங்களில் பேசியுள்ளேன். அதையே மீண்டும் தற்போது கூறுகிறேன்.

ஆட்சி மாற்றத்தை விரும்புகிறார்கள்

வடமாநிலங்களை பொறுத்தவரை இந்தி பேசும் மாநிலங்களை குறிவைத்து பா.ஜ.க.வினர் மீண்டும் ஆட்சியை பிடித்து விடலாம் என கணக்கு போட்டு வருகின்றனர். அது இனி வரும் தேர்தலில் நடக்காது. ஏனெனில் நான் செல்லும் இடங்களில் மக்களை சந்தித்து பேசுகிறேன். அவர்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புகின்றனர். என்னிடம் நீங்கள் எப்போது மீண்டும் ஆட்சிக்கு வருவீர்கள் என கூறுகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதை தொடர்ந்து புதிய இளைஞர் காங்கிரஸ் கட்சியில் இணைந்த இளைஞர்களுக்கு உறுப்பினர் படிவங்களை கார்த்தி சிதம்பரம் எம்.பி. வழங்கினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com