

சென்னை,
தவெகவுடனான கூட்டணியில் மதிமுக உறுதியாக உள்ளது என வைகோ பேசினார்.
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் மதிமுக பொதுச்செயலாளர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது;
திமுக ஆட்சியில் மக்கள் வெறுப்பின் உச்சத்தில் இருந்தனர். கடந்த திமுக ஆட்சியில் கமிஷன், கரெக்ஷன், கட்டிங் என ஊழல் இருந்தது. கூட்டணியில் இருந்ததால் இது தொடர்பான நான் எதையும் பேசவில்லை. கூட்டணியில் இருந்து விமர்சித்தால் அது அயோக்கியத்தனமாக இருக்கும்.
தவெகவுடனான கூட்டணியில் மதிமுக உறுதியாக உள்ளது. தவெக கூட்டணியில் ஓர் அங்கமாக மதிமுக தொடரும். வரவிருக்கும் 5 ஆண்டுகள் மட்டுமல்ல, அதன் பிறகும் தமிழகத்தின் முதல்-அமைச்சராக விஜய் தொடர்வார் என்ற நம்பிக்கை உள்ளது.” என்றார்.
பேட்டியின்போது, திமுக கூட்டணியில் இருந்தபோது திமுகவை ஏன் விமர்சிக்கவில்லை என செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். இந்த கேள்விக்கு வைகோ எதிர்வினையாற்றினார். அப்போது அந்த செய்தியாளருக்கும் வைகோவுக்கும் இடையே வாக்குவாதம் நீடித்த நிலையில், மதிமுக நிர்வாகிகளும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அப்பகுதி பரபரப்பானது.