முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்த பொதுமக்கள்

மகாளய அமாவாசையொட்டி வேலூர் பாலாற்றங்கரையில் ஏராளமான பொதுமக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.
முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்த பொதுமக்கள்
Published on

மகாளய அமாவாசை

இந்துக்கள் ஒவ்வொரு மாதமும் அமாவாசை தினத்தன்று முன்னோர்களை வழிபடுவது வழக்கம். அன்றைய தினம் முன்னோர்களின் நினைவாக தானம், தர்மம் செய்வார்கள். மேலும் காக்கைக்கு உணவு படைப்பார்கள். ஆடி, புரட்டாசி, தை ஆகிய மாதங்களில் வரும் அமாவாசை தினம் மற்ற மாதங்களில் வரும் அமாவாசையை விட சிறப்பானதாகும்.

இந்த 3 மாதங்களில் வரும் அமாவாசை தினத்தன்று புனித தீர்த்தங்களில் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து படையலிட்டு வழிபடுவது வழக்கம். இதன்மூலம் முன்னோர்களின் ஆசி கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

அதன்படி புரட்டாசி (மகாளய) அமாவாசை தினமான நேற்று இந்துக்கள் புனித தீர்த்தங்களுக்கு சென்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.

முன்னோர்களுக்கு தர்ப்பணம்

வேலூர் புதிய பஸ்நிலையம் அருகே உள்ள பாலாற்றங்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க ஏராளமான பொதுமக்கள் திரண்டனர். அவர்கள் அங்குள்ள காரிய மண்டபத்தில் நீண்ட வரிசையில் காத்திருந்து புரோகிதர்கள் மூலம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து படையலிட்டு வழிபட்டனர்.

இதனையொட்டி பாலாற்றங்கரையில் போலீசார் பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டிருந்தனர்.

பொதுமக்கள் பலர் விரதம் இருந்து தங்கள் வீடுகளில் வடை, பாயாசத்துடன் முன்னோர்களுக்கு படையலிட்டனர். பின்னர் காக்கைக்கு உணவு படைத்து வழிபாடு செய்தனர்.

பள்ளிகொண்டா

அதேபோன்று அகரம்சேரி பாலாற்றங்கரை, பள்ளிகொண்டா உத்திர ரங்கநாதர் கோவில், விரிஞ்சிபுரம் உள்பட பல்வேறு இடங்களில் பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். இதேபோல் முன்னோர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டி, அவர்கள் விரும்பி சாப்பிட்ட உணவுப்பொருட்களை படையலிட்டு வழிபட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com