

சென்னை,
இந்தி திணிப்பை மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா கூறியுள்ளார். சமீபத்தில் அவர் ஆங்கில பத்திரிக்கை ஒன்றிற்கு பேட்டியளிக்கும் போது இந்தி திணிப்பு குறித்து பேசியுள்ளார்.
அப்போது பேசிய அவர், ஆங்கிலேயர்கள் வருகைக்கு பிறகு தான் இந்தியாவில் அனைத்து தரப்பினரும் கல்வி கற்கும் நிலை உருவானது. தாய்மொழியை கற்றுக்கொள்வதோடு ஆங்கிலத்தையும் கற்றுக்கொள்ள வேண்டி இருந்த நிலையில் மேலும் ஒரு மொழியை கற்றுக்கொள்ள சொல்வதை மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று கூறினார்.
மேலும் அவர், தமிழ் மொழி வளர்ச்சிக்கு ரூ. 25 கோடியும் சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்கு ரூ. 600 கோடியும் ஒதுக்கியுள்ளதை சுட்டிக்காட்டிய அவர், அதை மக்கள் கவனித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். இதில் தமிழ்நாடு மட்டுமில்லாமல் மற்ற மாநிலங்களும் அவர்கள் மொழி நடத்தப்படும் விதத்தை பார்த்து வருவதாக குறிப்பிட்டார்.
தனக்கு வழங்கப்பட்டுள்ள பத்ம ஶ்ரீ விருதை சுட்டிக்காட்டிய சாலமன் பாப்பையா, அதில் ஒரு வரி கூட தமிழிலும் ஆங்கிலத்திலும் இல்லை என்றும் முழுமையாக இந்தியில் மட்டுமே உள்ளது என்றும் தெரிவித்ததுடன் அதில் தன்னை விமர்சித்திருந்தால் கூட அது தனக்கு தெரிந்திருக்காது என்று தெரிவித்தார்.