பாஜக - அதிமுக பொய் பரப்புரைகளை மக்கள் ஏற்க மாட்டார்கள் - வீரபாண்டியன்

தமிழ்நாட்டுக்கு வழங்கிய பேரிடர் நிதியை விட 100 விழுக்காடு கூடுதல் நிதியை பாஜக ஆட்சி நடைபெறும் மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்கி உள்ளது என வீரபாண்டியன் கூறியுள்ளார்.
பாஜக - அதிமுக பொய் பரப்புரைகளை மக்கள் ஏற்க மாட்டார்கள் -  வீரபாண்டியன்
Published on

சென்னை,

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மதுரையில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடியும், தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சித் தலைவர்களும் உரையாற்றினர். அவ்வுரைகள் முரண்பாடுகளும், குழப்பங்களும் வாய்ச்சவடால்களும் நிரம்பி வழிந்தவையாக இருந்தன.

அஇஅதிமுக - பாஜக கூட்டணி என எடப்பாடி கே. பழனிசாமியும், அவரது கட்சியினரும் பேசி வருகின்றனர். எடப்பாடி கே.பழனிச்சாமி அவ்வாறே அக்கூட்டத்தில் பேசியதோடு, அஇஅதிமுக ஆட்சி அமைக்கும் என்றார். அதற்கு மாறாக, பிரதமர் மோடி அவர்களோ, தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறும். அடுத்து, தேசிய ஜனநாயக கூட்டணியின் அரசு அமையும் எனப் பேசினார். இவை, கூட்டணியின் பெயர் குறித்தும், யார் ஆட்சி அமைப்பார்கள் என்பது குறித்தும் அக்கட்சிகளிடையே உள்ள முரண்பாட்டை வெளிப்படுத்துகிறது. இந்த முரண்பாடு குறித்தும், தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அமையும் என பிரதமர் மோடி பேசியது குறித்தும், அஇஅதிமுகவினர் வாய் மூடி மௌனிகளாக உள்ளனர்.

கடந்த 2014 ஆம் ஆண்டில் இருந்து, 2025 ஆம் ஆண்டு வரை தமிழ்நாட்டில் ஏற்பட்ட புயல், வெள்ளம் உள்ளிட்ட இயற்கை பேரிடர்களுக்கான, நிவாரண நிதியாக ரூ.24 ஆயிரத்து 679 கோடி வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசால் கேட்கப்பட்டது.ஆனால், கேட்கப்பட்ட நிதியில் வெறும் 17 விழுக்காடு நிதியை மட்டுமே ஒன்றிய மோடி அரசு வழங்கியது. தமிழ் நாட்டை வஞ்சித்தது.

தமிழ்நாட்டுக்கு வழங்கிய பேரிடர் நிதியை விட 100 விழுக்காடு கூடுதல் நிதியை பாஜக ஆட்சி நடைபெறும் மகராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு வழங்கியது. மோடி அரசின் இந்த பாரபட்சப் போக்கையும் வன்மத்தையும் தமிழ்நாட்டு மக்கள் மறந்து விடவில்லை. அதேபோல் மதுரை, கோவை மெட்ரோ இரயில் திட்டங்களுக்கு அனுமதி மறுத்து விட்டு, வளர்ச்சிக்கு உதவுவதாக பிரதமர் மோடி வாய்ச்சவாடல் அடிக்கிறார். அதை மக்கள் ஏற்க மாட்டார்கள்.

தமிழ்நாடு நீண்டகாலமாக பின்பற்றி வரும் இரு மொழிக் கொள்கைக்கு எதிரான ஒன்றிய அரசின் தேசியக் கல்விக் கொள்கை - 2020 ஐயும், இந்தி படிப்பதை கட்டாயமாக்கும் பிஎம் ஸ்ரீ கல்வி திட்டத்தையும் ஏற்கும்படி நிர்பந்தித்து, தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய கல்வி நிதி ரூ.2401 கோடியை கொடுக்க மறுத்து வரும் ஒன்றிய அரசின் அடாவடித்தன அரசியலுக்கு, தமிழ்நாடு சரியான பாடம் புகட்டும்.

நமது நாடாளுமன்ற ஜனநாயக முறையில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில ஆட்சிக்கு எதிராக, ஆளுநர் வழியாக, போட்டி அரசாங்கம் நடத்தும் அதிகார அத்துமீறல்களும், அட்டூழியங்களும் ஜனநாயக உணர்வு கொண்டோர் உள்ளங்களில் ஆழமான காயங்களை ஏற்படுத்தியுள்ளது. மாநில அரசுக்கு எதிராக செயல்படும் மோடி, மண்ணுரிமை போராட்டம் நடத்திய கட்டபொம்மன், அழகுமுத்துக்கோன், பூலித்தேவன் பெயர்களை குறிப்பிட்டு, புகழுரையாற்றுவது பச்சை பாசங்குத்தனமாகும். தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றும் வேலையாகும்.

தமிழ்நாட்டின் மதநல்லிணக்கத்தை சீர்குலைக்கும் நோக்கத்துடன் திருப்பரங்குன்றத்தின் தீபம் ஏற்றும் வழக்கத்தை மாற்ற நடக்கும் முயற்சிகளையும், அதற்கு தமிழர்கள் வணங்கும் கடவுளான முருகனை பயன்படுத்துவதும் அப்பட்டமான வகுப்புவாதப் பரப்புரையாகும். நாட்டின் பிரதமர் பொறுப்பில் இருந்து கொண்டு, பேசும் பொறுப்பற்ற பேச்சாகும். மொத்தத்தில் மதுரை தேர்தல் பரப்புரை கூட்டம் பொய்யும், புனைச்சுருட்டும் நிறைந்த வெற்று முழக்கங்களாக அமைந்தது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com