

சென்னை,
தமிழக சட்டசபை தேர்தல் நாளை மறுநாள் நடைபெறவுள்ளது. இதையடுத்து மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 4,023 வேட்பாளர்கள் களத்தில் நிற்கின்றனர். தி.மு.க., அ.தி.மு.க., நாம் தமிழர், த.வெ.க. என 4 முனை போட்டி நிலவுகிறது. இந்த தேர்தலில் வெற்றி வாகை சூடுவ தற்காக ஒவ்வொரு கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன.
அந்த வகையில், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அதன்படி, கோவை வடக்கு தொகுதியில் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இருசக்கர வாகனத்தில் வீதிவீதியாக சென்று அண்ணாமலை வாக்கு சேகரித்தார்.
அதன்பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் அண்ணாமலை கூறியதாவது:-
கருத்து கணிப்புகள் அனைத்தும் நமக்கு சாதகமாக அமைந்திருக்கிறது. இருந்தும் கருத்துக் கணிப்புகளில் தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆதரவு பற்றி சரியான கணிப்பு இல்லை. தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அனைத்து இடங்களிலும் ஆதரவு அலை வீசிவருகிறது. மே 4-ம் தேதி ஒவ்வொரு தொகுதியிலும் எங்கள் வேட்பாளர்களின் வெற்றி மார்ஜினை பார்க்கும்போது நிறையபேர் ஆச்சரியப்படுவார்கள்.
செய்த தவறை செந்தில்பாலாஜி எப்போது ஒப்புக்கொண்டுள்ளார். எப்போதும் அவர் செய்த தவறை ஒப்புக்கொள்ள மாட்டார். காந்தியவாதி மாதிரி செந்தில்பாலாஜி பேசுவார்; நாளை மறுநாள் வரை காந்தி மாதிரி தான் இருப்பார். தேர்தல் நாளன்று (23-ம் தேதி) செந்தில் பாலாஜியின் முகத்திரையை மக்கள் கிழிப்பார்கள். கோவையில் வானதி சீனிவாசனின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.