ரூ.3 ஆயிரம் உதவித்தொகை வழங்க வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.3 ஆயிரம் உதவித்தொகை வழங்க வலியுறுத்தி சென்னையில் நேற்று மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ரூ.3 ஆயிரம் உதவித்தொகை வழங்க வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் போராட்டம்
Published on

சென்னை,

தமிழக அரசு சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகையாக ரூ.1,500 வழங்கப்பட்டு வந்தது. இந்த உதவித்தொகையை ரூ.3 ஆயிரமாக உயர்த்த வேண்டும் என வலியுறுத்தி, சென்னை சேப்பாக்கத்தில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் நேற்று போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்துக்கு அச்சங்கத்தின் மாநில தலைவி ஜான்சி ராணி தலைமை தாங்கினார். பொது செயலாளர் நம்புராஜன் முன்னிலை வகித்தார்.

போராட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர். இந்த போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் அங்கிருந்து பேரணியாக சென்று தலைமை செயலகத்தை முற்றுகையிட முயன்றனர். அவர்களை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் இரும்பு வேலி அமைத்து பேரணி செல்வதை தடுத்தனர். இதனால் அங்கு போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து போராட்டக்காரர்கள் சேப்பாக்கத்திலேயே அமர்ந்து போராட்டத்தை தொடர்ந்தனர்.

அமைச்சருடன் பேச்சுவார்த்தை

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து இந்த போராட்டத்தில் பங்கேற்க வந்த மாற்றுத்திறனாளிகளை போலீசார் ஆங்காங்கே தடுத்து நிறுத்தினர். இதனால் போராட்டக்களத்துக்கு செல்ல வழியில்லாமல் இருந்த மாற்றுத்திறனாளிகளுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் பிரதிநிதிகளுடன், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமையில் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் கூடுதல் உதவித்தொகை உள்ளிட்ட தங்களது கோரிக்கைகளை அமைச்சரிடம் தெரிவித்தனர். இதையடுத்து அமைச்சர் கீதாஜீவன் மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகள் அனைத்தும் படிப்படியாக நிறைவேற்றப்படும் என உறுதி அளித்தார். இந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து அமைச்சர் கீதாஜீவன் நிருபர்களிடம் கூறியதாவது:-

போராட்டம் வாபஸ்

அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினரின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். முதல்-அமைச்சரின் அறிவுறுத்தலின்படி மாற்றுத்திறனாளிகளிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் மாற்றுத்திறனாளிகள் தங்களது கோரிக்கைகளை தெரிவித்தனர். மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை பெறக்கூடிய மாற்றுத்திறனாளிகளில் 2 லட்சத்து 11 ஆயிரத்து 147 பேருக்கு ரூ.1,500 வழங்கப்பட்டு வந்த உதவித்தொகை ரூ.2 ஆயிரமாக உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிவிப்பு தற்போது அமலுக்கு வந்துள்ளது. ஏற்கனவே மாற்றுத்திறனாளிகளுக்கு பேருந்துகளில் இலவச பயணம், மாதாந்திர உதவித்தொகை அனைவருக்கும் வழங்கப்பட்டு வருகிறது. நிதிநிலையை பொறுத்து படிப்படியாக மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை அனைத்தும் நிறைவேற்றப்படும். வரும் டிசம்பர் 3-ந் தேதிக்குள் மெரினா கடற்கரைக்கு மாற்றுத்திறனாளிகள் செல்வதற்கு நிரந்தர பாதை அமைத்து கொடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதைத்தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் சங்க தலைவர் ஜான்சிராணி கூறியதாவது:-

அமைச்சருடன் நடந்த பேச்சுவார்த்தையில் எங்களது கோரிக்கைகளை படிப்படியாக நிறைவேற்றப்படும் என உறுதி அளித்துள்ளார். இதர கோரிக்கைகள் குறித்து பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன் ஏற்பாடு செய்யப்படும் என தெரிவித்துள்ளார். அமைச்சருடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் தற்போது நடைபெறும் போராட்டம் வாபஸ் பெறப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com