

சென்னை,
ஒரு மெகா வாட்டுக்கு குறைவாக காற்றாலை மூலமாக மின் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள், மின்சாரத்தை நேரடியாக பயன்படுத்தவும், வினியோகம் செய்யவும் தடை விதிக்கும் வகையில் தமிழக அரசு கடந்த 2018-ம் ஆண்டு அரசாணை ஒன்றை வெளியிட்டது.
இந்த அரசாணை சட்டவிரோதமானது எனக்கூறி கோவை மின்நுகர்வோர் சங்கம் உள்பட தனியார் நிறுவனங்கள் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மேல்முறையீட்டு வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.வேல்முருகன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் விஜய்நாராயண் ஆஜராகி, ஏழை மக்களின் நலன் கருதியே தமிழக அரசு இந்த முடிவை எடுத்துள்ளது என்று வாதிட்டார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல்கள் பி.எஸ்.ராமன், ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் ஆகியோர், எங்களிடம் இருந்து ஒரு யூனிட் காற்றாலை மின்சாரம் ரூ.2-க்கு மட்டுமே வாங்கப்படுகிறது. ஆனால், அதானி நிறுவனத்திடம் இருந்து 21 ஆண்டுகளுக்கு ஒரு யூனிட் சூரிய சக்தி மின்சாரம் ரூ.7-க்கு வாங்கப்படுகிறது. இதன் மூலம் ஒரு யூனிட் மின்சாரம் வாங்குவதன் மூலம் ரூ.5 அரசுக்கு இழப்பு ஏற்படுகிறது என்று வாதிட்டனர்.
இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-
மனுதாரர்கள் தரப்பு மூத்த வக்கீல்கள் கூறுவதை ஏற்காமல் இருக்க முடியாது. பொதுமக்களின் வரிப் பணத்தை கொண்டு தனியார் நிறுவனத்திடம் இருந்து மின்சாரம் அதிக விலைக்கு வாங்கப்படுகிறதா? என்பதை தெரிந்துகொள்ள விரும்புகிறோம். எனவே, கீழ்க்கண்ட கேள்விகளுக்கு விரிவான பதில்களை தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழகம் அளிக்க வேண்டும்.
கடந்த 10 ஆண்டுகளில் எத்தனை தனியார் நிறுவனங்களிடம் இருந்து எவ்வளவு மின்சாரம் கொள்முதல் செய்யப்படுகிறது? மின்சாரம் கொள்முதல் தொடர்பாக என்னென்ன ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளது?
21 ஆண்டுகளுக்கு ஒரு யூனிட் மின்சாரம் ரூ.7-க்கு வாங்குவதாக அதானி மின்சார உற்பத்தி நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதா? மனுதாரர்களிடம் இருந்து ஒரு யூனிட் மின்சாரம் ரூ.2-க்கு வாங்குவது உண்மைதானா? அதானி மின்சார உற்பத்தி நிறுவனத்திடம் இருந்து மின்சாரம் வாங்குவதால் ஒரு யூனிட்டுக்கு ரூ.5 இழப்பு ஏற்படுகிறதா?
இந்த கேள்விகள் உள்பட மேலும் 5 கேள்விகளை நீதிபதிகள் கேட்டு இருந்தனர். இந்த வழக்கு விசாரணையை வருகிற 26-ந்தேதிக்கு தள்ளிவைப்பதாக நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.