பேரம்பாக்கம், திருவாலங்காடு சுற்றுவட்டார பகுதியில் சூறைக்காற்றுடன் மழை - மரங்கள், மின்கம்பங்கங்கள் சாய்ந்ததால் மின்தடை

பேரம்பாக்கம், திருவாலங்காடு சுற்றுவட்டார பகுதியில் நேற்று சூறைக்காற்றுடன் பெய்த திடீர் மழையால் மரங்கள், மின்கம்பங்கங்கள் சாய்ந்தன.
பேரம்பாக்கம், திருவாலங்காடு சுற்றுவட்டார பகுதியில் சூறைக்காற்றுடன் மழை - மரங்கள், மின்கம்பங்கங்கள் சாய்ந்ததால் மின்தடை
Published on

திருவள்ளூர் அடுத்த பேரம்பாக்கம், சிற்றம்பாக்கம், செஞ்சி, பானம்பாக்கம், வேப்பஞ்செட்டி, புதுமாவிலங்கை, அகரம், எம்.ஜி.ஆர்.நகர், கடம்பத்தூர், கசவநல்லூர், கீழச்சேரி, பண்ணூர், நரசிங்கபுரம், இருளஞ்சேரி, சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை சூறைக்காற்றுடன் இடியுடன் கூடிய மழை பெய்தது.

இந்த மழையின் காரணமாக புதுமாவிலங்கை பகுதியில் வேப்ப மரங்கள் வேரோடு சாய்ந்து சாலையில் விழுந்தது. இதன் காரணமாக கடம்பத்தூர் பேரம்பாக்கம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் மழை காரணமாக மின்தடை ஏற்பட்டது. இதன் காரணமாக பொதுமக்கள் அவதியுற்றனர்.

திருவாலங்காடு ஒன்றியம் சின்னம்மாபேட்டை பகுதியில், நேற்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாலை பலத்த சூறைக்காற்று வீசத்தொடங்கியது. காற்றை தொடர்ந்து கனமழை பெய்யத்தொடங்கியது. ஒரு மணி நேரம் பெய்த கனமழையால் சாலையோரங்களில் மழைநீர் குட்டைபோல் தேங்கியது.

சின்னம்மாபேட்டை சுற்றுவட்டார பகுதிகளிலும் கனமழை பெய்தது. சின்னம்மாபேட்டையில், தக்கோலம் நெடுஞ்சாலையில் அமைந்திருந்த 200 ஆண்டுகள் பழமையான அரசமரம் வேறுடன் சாய்ந்ததில் 3 மின் கம்பங்கள் சாலையில் உடைந்து விழுந்தன. இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அதிர்ஷ்டவசமாக மரம் சாயும்போது ஆட்கள் நடமாட்டம் இல்லாததால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. மின் கம்பங்கள் சாய்ந்ததால் சின்னம்மாபேட்டை தொழுதாவூரில் 14 மணி நேரத்திற்கு மேலாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

சிக்னல் கோளாறால் ரெயில்கள் தாமதம்

சென்னை-அரக்கோணம் ரெயில் மார்க்கத்தில் கடம்பத்துர் ஏகாட்டூர் ரெயில் நிலையத்திற்கு இடையே இடி மின்னலால் அங்கிருந்த ரெயில்வே சிக்னல் கோளாறு ஏற்பட்டது.

இதனால் காரணமாக சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்துக்கு வந்து கொண்டிருந்த சதாப்தி, வந்தேபாரத், ஜோலார்பேட்டை விரைவு ரெயில்கள் உட்பட அனைத்து ரெயில்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டது. மேலும் சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்திலிருந்து அரக்கோணம் திருத்தணிக்கு சென்ற மின்சார புறநகர் ரெயில்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு காலதாமதமாக சென்றது. பின்னர் இரண்டு மணி நேரம் கழித்து சிக்னல் சீரமைக்கப்பட்டு ரெயில்கள் புறப்பட்டு சென்றதால் பயணிகள் கடும் சிரமப்பட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com