பெரம்பலூர்: பேக்கரியை அடித்து நொறுக்கிய நபர் தப்பியோட்டம்- போலீசார் வலைவீச்சு

பேக்கரி கடையில் அந்த பெண் எதிர்பாராதவிதமாக தான் கொண்டு வந்த சுமார் ரூ.78,000 ரொக்கப் பணத்தை அங்கேயே தவறவிட்டுச் சென்றுள்ளார்.
பெரம்பலூர்: பேக்கரியை அடித்து நொறுக்கிய நபர் தப்பியோட்டம்- போலீசார் வலைவீச்சு.
பேக்கரி கடை
Published on: 

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள கீழப்புலியூரில், பேக்கரி கடை ஒன்றை நபர் ஒருவர் மரக்கட்டையால் அடித்து நொறுக்கும் அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பேக்கிரி உரிமையாளரின் நேர்மை

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள கீழப்புலியூரில் பேக்கரி கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த பேக்கிரிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு பெண் ஒருவர் வந்துள்ளார். அவர் எதிர்பாராதவிதமாக தான் கொண்டு வந்த சுமார் ரூ.78,000 ரொக்கப் பணத்தை அங்கேயே தவறவிட்டுச் சென்றுள்ளார். கடையை சுத்தம் செய்யும்போது அந்த பணத்தைக் கண்டெடுத்த பேக்கரி உரிமையாளர், நேர்மையுடன் அதனை குன்னம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

தாக்குதலுக்கான காரணம்

பணத்தை தவறவிட்ட அந்த பெண் குறிப்பிட்ட ஒரு நபருக்கு கொடுப்பதற்காக அந்த கடன் தொகையைக் கொண்டு வந்துள்ளார். இதையடுத்து கடையில் தவறவிட்ட பணம் போலீசாரிடம் சென்றதால், அந்த நபரால் உடனடியாக பணத்தை வாங்க முடியாமல் போனது.

இதனால் கடும் ஆத்திரமடைந்த கடன் தொகையை பெறவேண்டிய அந்த நபர், "பணத்தை ஏன் போலீசிடம் கொடுத்தாய், என்னிடம் கொடுத்திருக்கலாம் அல்லவா?" என்று கூறி பேக்கரி உரிமையாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில், வெறித்தனமாக பெரிய மரக்கட்டை ஒன்றை தூக்கி வந்து பேக்கரியின் கண்ணாடிக் கதவுகள் மற்றும் டிஸ்பிளே கவுண்ட்டர்களை சரமாரியாக அடித்து நொறுக்கினார்.

போலீஸ் நடவடிக்கை

இந்த தாக்குதலின்போது கடையில் இருந்த பெண் ஒருவர் பயத்தில் அலறிய சத்தம் சிசிடிவி கேமராவில் பதிவாகி, பார்ப்போரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. மேலும் இதுகுறித்து குன்னம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக உள்ள அந்த நபரை தீவிரமாகத் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com