பெரம்பூர் எம்.எல்.ஏ. அலுவலகம் இன்று திறப்பு: தொகுதி மக்களையும் சந்திக்கிறார் முதல் அமைச்சர் விஜய்

பெரம்பூர் தொகுதி எம்.எல்.ஏ. அலுவலகத்தை முதல்-அமைச்சர் விஜய் இன்று திறந்து வைக்கி றார். மேலும் மக்களை சந்தித்து இ-சேவை மையம் மூலம் விண்ணப்பித்தவர்களுக்கு சான்றிதழ்களையும் வழங்குகிறார்.
பெரம்பூர்  எம்.எல்.ஏ. அலுவலகம் இன்று  திறப்பு: தொகுதி மக்களையும் சந்திக்கிறார் முதல் அமைச்சர் விஜய்
Published on

சென்னை,

முதல்-அமைச்சர் விஜய் சட்டமன்றத் தேர்தலில் பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதில் திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு, பெரம்பூர் எம்.எல்.ஏ.வாக உள்ளார்.தொகுதி மக்களின் குறைகளைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டு வருகிறார். அதன்படி, பெரம்பூர் தொகுதி அலுவலகம் சென்னை வியாசர்பாடி சர்மா நகர் 1-வது தெருவில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த அலுவலகத்தின் முன்பகுதியில், "பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் ச. ஜோசப் விஜய்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சுற்றிலும் காம்பவுண்டு சுவர் அமைக்கப்பட்டு, கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன. முதல்-அமைச்சர் விஜய்க்காக தனி அறையும் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. அலுவலகத்தினுள் தனியாக கம்ப்யூட்டர்கள் அமைக்கப்பட்டு, 10 பணியாளர்கள் தினமும் பொதுமக்களின் குறைகளைக் கேட்டு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இன்று திறந்து வைக்கிறார்

இந்த அலுவலகத்தை முதல்-அமைச்சர் விஜய் இன்று பிற்பகல் 3 மணிக்கு திறந்து வைக்கிறார். சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, இன்று முதல் முறையாக அவர் தனது தொகுதிக்குச் செல்வதால், அவருக்கு த.வெ.க. நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளிக்க உள்ளனர்.ஏற்கனவே செயல்பட்டு வந்த கட்டிடம் ஒன்றை புதுப்பித்து, அதனை நவீனமயமான எம்.எல்.ஏ. அலுவலகமாக மாற்றியுள்ளனர். எம்.எல்.ஏ. அலுவலகத்தை திறந்து வைத்த பிறகு, முதல்-அமைச்சர் விஜய் அருகில் உள்ள ரேஷன் கடைக்குச் சென்று ஆய்வு செய்கிறார். புதிய ரேஷன் கார்டுகள் மற்றும் பட்டாக்களையும் பொதுமக்களுக்கு அவர் வழங்குகிறார்.

புதிய செயலி

எம்.எல்.ஏ. அலுவலகத்தில் தொகுதி மக்களின் குறைகளைத் தீர்ப்பதற்காக செயலி ஒன்றும் வடிவமைக்கப்பட்டுள்ளது. செல்போன் செயலியான அதில், பொதுமக்கள் தங்களது குறைகளை எந்த நேரத்திலும் தெரிவிக்கலாம். பெரம்பூர் தொகுதி மக்கள் தங்களது குறைகளையும் புகார்களையும் தொகுதி எம்.எல்.ஏ.வான முதல்-அமைச்சரிடம் நேரடியாகத் தெரிவிக்கும் வகையில் தொடங்கப்பட உள்ள இந்த செயலிக்கு ‘மக்கள் சேவை தளம்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. முதல்-அமைச்சர் விஜய் இந்த பிரத்யேக செல்போன் செயலியையும் நாளை அறிமுகம் செய்து தொடங்கி வைக்கிறார்.

அடிப்படை தேவைகள்

இந்தச் செயலி மூலம் பெரம்பூர் தொகுதி மக்கள் தங்களின் அடிப்படைத் தேவைகளான மின்சாரம், சாலை வசதி, குடிநீர், துப்புரவுப் பணி, கல்வி மற்றும் மருத்துவ உதவிகள், அரசு நலத்திட்டங்கள், வீட்டு வசதி உதவிகள், வேலைவாய்ப்பு, வணிகம் மற்றும் சட்டரீதியான ஆவண உதவிகள், அவசர உதவிகள் உள்ளிட்ட அனைத்து பிரச்சினைகள் குறித்தும் நேரடியாக முதல்-அமைச்சர் விஜய்யின் கவனத்துக்குக் கொண்டு செல்ல முடியும்.

சில நொடிகளில்

இந்தச் செயலி மூலம் பொதுமக்கள் தங்களது புகாரைப் பதிவு செய்ததும், அடுத்த சில நொடிகளிலேயே அது பெரம்பூர் எம்.எல்.ஏ. அலுவலகத்தைச் சென்றடையும். புகார் சமர்ப்பிக்கப்பட்டவுடன், அதை ஏற்றுக்கொண்டதற்கான உறுதிப்படுத்தல் குறுஞ்செய்தி, புகார் அளித்தவரின் செல்போன் எண்ணுக்கு செல்லும் வகையிலேயே செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.புகார் அளித்தவர்கள் தங்களது புகார் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை எந்த நிலையில் உள்ளது என்பதையும் செல்போன் மூலமாகவே தெரிந்துகொள்ளலாம்.புகார் அளிக்கப்பட்டது முதல், பிரச்சினைகள் தீர்க்கப்படுவது வரை தங்களது மனுக்கள் எந்த நிலையில் உள்ளன என்பதையும் தொகுதி மக்கள் கண்காணிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

3 நாட்கள்

முதல்-அமைச்சர் விஜய் அறிமுகப்படுத்தும் இந்தச் செயலி மூலம் பெறப்படும் புகார்கள் மீது குறைந்தபட்சம் 3 நாட்களுக்குள் முதற்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.குடிநீர், மின்சாரம், சாலை வசதி, துப்புரவுப் பணிகள் போன்ற அத்தியாவசியப் பிரச்சினைகளுக்கு அதிகபட்சமாக 10 நாட்களுக்குள் முழுமையான தீர்வு காணப்பட்டு, அது குறித்த விரிவான பதிலை மக்களுக்கு செயலி வழியாகவே தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.பெரம்பூர் தொகுதி எம்.எல்.ஏ. அலுவலகத்தில் இச்செயலியைப் பிரத்யேகமாகக் கண்காணிப்பதற்கான நவீன கட்டுப்பாட்டு அறையும் அமைக்கப்பட்டுள்ளது.இந்த 'டிஜிட்டல்' மக்கள் சேவை செயலி பொதுமக்களுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் இடையே ஒரு பாலமாகச் செயல்படும் வகையில் உருவாக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

தொகுதி மக்கள்

இன்று திறக்கப்பட உள்ள பெரம்பூர் தொகுதி சட்டமன்ற அலுவலகத்தை பொதுமக்கள் நேற்றே நேரில் சென்று பார்த்து புகைப்படங்களையும் எடுத்தனர். இந்த அலுவலகத்துக்கு எதிரில் உள்ள பெரிய காம்பவுண்டு சுவரில் த.வெ.க. அரசின் சாதனைகளை விளக்கும் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. பிறந்த குழந்தைக்கு தங்க மோதிரம், சிங்கப்பெண் திட்டம் ஆகியவை பற்றிய புகைப்படங்கள் முதல்-அமைச்சர் விஜய் படத்துடன் இடம்பெற்றுள்ளன. விழாவையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதல்-அமைச்சர் விஜய் செல்லும் வழியில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்புப் பணிகளை போலீசார் நேற்றே தொடங்கியுள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com