

சென்னை,
பெரம்பூரில் ரூ.41.66 கோடியில் நவீன பேருந்து நிறுத்தங்கள், விளையாட்டுத் திடல்கள், பூங்காக்கள் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-
பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியில் ரூ.41.66 கோடி மதிப்பீட்டில் நவீன பேருந்து நிறுத்தங்கள், நீர்தேக்கத்தொட்டிகளுடன் கூடிய மோட்டார் அறைகள், மழைநீர் வடிகால் பணிகள், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், பள்ளிக் கட்டடங்கள் மேம்பாடு, விளையாட்டுத் திடல்கள், பூங்காக்கள், சமூகக் கூடம் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்தப் பணிகளை இணை ஆணையாளர் (பணிகள்) சரவணன், இன்று (26.11.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, நடைபெற்று வரும் பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் தலா ரூ.20.30 லட்சம் மதிப்பீட்டில் வார்டு 36-க்குட்பட்ட சிட்கோ நகர் பிரதான சாலை மற்றும் எருக்கஞ்சேரி நெடுஞ்சாலையில் உள்ள சர்மா நகர், வார்டு 37-க்குட்பட்ட எம்.கே.பி. நகரின் சென்ட்ரல் அவென்யூ சாலை சந்திப்பிலும், சென்ட்ரல் அவென்யூ சந்திப்பில் உள்ள எஸ்.எம்.நகர் பிரதான சாலையிலும், எம்.கே.பி. நகர் பேருந்து பணிமனைக்கு எதிரில் எஸ்.எம். நகர் பிரதான சாலையிலும் என மொத்தம் 5 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள், மின்சார வாகனங்களுக்கான மின்னேற்றும் வசதி, பெண்களின் பாதுகாப்பிற்காக மையப்படுத்தப்பட்ட கட்டுப்பாட்டு அமைப்பு, வைஃபை மற்றும் மின்விளக்கு வசதிகளுடன் 5 நவீன பேருந்து நிறுத்த நிழற்குடைகள் கட்டப்பட்டு வருகிறது.
சிட்கோ பிரதான சாலையில் உள்ள வாசுகி நகர் பூங்காவில் மூலதன நிதியில் 1,100 சதுர மீட்டர் பரப்பளவில் ரூ.1.08 கோடி மதிப்பீட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்ற ரப்பர் தரைத்தளம், விளையாட்டு உபகரணங்கள், திறந்தவெளி உடற்பயிற்சிக் கூடம், கான்கிரீட் நடைபாதை, பராமரிப்பாளர் அறை, ஓய்வறை, சுற்றுச்சுவர், விளையாட்டுப் பகுதி, பூந்தொட்டிகள், நிலத்தோற்ற மேம்பாடு மற்றும் இருக்கை வசதிகள் உள்ளிட்ட மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சர்மா நகர் 9-வது தெருவில் பூங்கா மற்றும் விளையாட்டு மைதானத்தில் மூலதன நிதி மற்றும் முதல்-அமைச்சரின் ஒருங்கிணைந்த நகர்ப்புற மேம்பாட்டுத் திட்ட நிதியில் ரூ.1.31 கோடி மதிப்பீட்டில் உடற்பயிற்சிக் கருவிகள், நடைபாதை பேவர் பிளாக், திறந்தவெளி உடற்பயிற்சிக் கருவிகள் மற்றும் கிரிக்கெட் மைதானம் உள்ளிட்ட மேம்பாட்டுப் பணிகள் மற்றும் ரூ.1.42 கோடி மதிப்பீட்டில் குத்துச்சண்டை வளையம், இழுவைத் துணிக் கூரையுடன் கூடிய பார்வையாளர் மாடம், ஏற்கனவே உள்ள உடற்பயிற்சிக் கட்டடத்தை மேம்படுத்துதல், விளையாட்டு மைதானத்தில் மண் நிரப்புதல் மற்றும் மழைநீர் வடிகால் உள்ளிட்ட மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேயர் கிருஷ்ணமூர்த்தி நகர் விளையாட்டு மைதானத்தில் பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி மற்றும் முதல்-அமைச்சரின் ஒருங்கிணைந்த நகர்ப்புற மேம்பாட்டுத் திட்ட நிதி ரூ.90.98 லட்சம் மதிப்பீட்டில் 3,876 சதுர மீட்டர் பரப்பளவில் கண்காணிப்புக் கேமராக்கள், மின் விளக்கு வசதி, பார்வையாளர் மாடம், திறந்தவெளி உடற்பயிற்சிக் கூடம் உள்ளிட்ட வசதிகளுடன் பல்நோக்கு விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் மேயர் கிருஷ்ணமூர்த்தி நகர், எம்.எம். கார்டன், ஜானகிராமன் தோட்டம், கணேசபுரம், வியாசர் நகர் மற்றும் சாந்தி நகர் பகுதிகளைச் சேர்ந்த சுமார் 2,500 பேர் பயன்பெறுவர்.
எஸ்.எம். நகரில் ரூ.1.13 கோடி மதிப்பீட்டில் 4,569 சதுர மீட்டர் பரப்பளவில் கால்பந்து மைதானம், பார்வையாளர் மாடம், பொதுக் கழிப்பறை, சுற்றுச்சுவர், நுழைவு வளைவு, நடைபாதை மற்றும் பசுமைப் பகுதிகள் உள்ளிட்ட வசதிகளுடன் குழந்தைகள் விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டு வருகிறது.
வார்டு 45-க்குட்பட்ட வியாசர்பாடி, எருக்கஞ்சேரி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள டாக்டர் அம்பேத்கர் கலைக் கல்லூரியில் 6,765 சதுர மீட்டர் பரப்பளவில் முதல்-அமைச்சரின் ஒருங்கிணைந்த நகர்ப்புற மேம்பாட்டுத் திட்ட நிதி மற்றும் பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.65.73 லட்சம் மதிப்பீட்டில் 330.02 சதுர மீட்டர் பரப்பளவில் கிரிக்கெட் வலைப் பயிற்சித் தளங்கள், கிரிக்கெட் மற்றும் கைப்பந்து விளையாட்டு வசதிகள், மின்விளக்கு வசதிகளுடன் கூடிய விளையாட்டு மைதானம் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் மூலம் கல்லூரியில் பயிலும் 3,250 மாணவர்கள் பயன்பெறுவர்.
வார்டு 37-க்குட்பட்ட வியாசர்பாடி, முல்லை நகரில் 166.49 சதுர மீட்டர் பரப்பளவில் நமக்கு நாமே திட்டம் மற்றும் மூலதன நிதியில் ரூ.1.99 கோடி மதிப்பீட்டில் சுற்றுச்சுவர் அமைத்தல் மற்றும் உடற்பயிற்சிக் கருவிகள் நிறுவுதல் உள்ளிட்ட வசதிகளுடன் விளையாட்டு வளாகம் அமைக்கப்பட்டு வருகிறது.
வார்டு 37-க்குட்பட்ட உதயசூரியன் நகர் சென்னை தொடக்கப்பள்ளியின் முதல் தளத்தில் மூலதன நிதியில் ரூ.38 லட்சம் மதிப்பீட்டில் 145 சதுர மீட்டர் பரப்பளவில் இரண்டு வகுப்பறைகள், சுற்றுச்சுவர் அமைத்தல், கழிப்பறை உள்ளிட்ட வசதிகளுடன் கூடுதல் வகுப்பறைகள் கட்டப்பட்டு வருகிறது.
வார்டு 34-க்குட்பட்ட கொடுங்கையூர் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய வளாகத்தில் ரூ.1.72 கோடி மதிப்பீட்டில் 75,000 மரக்கன்றுகள் நடும் பணிகளின் ஒரு பகுதியாக 498 மரங்கள் நடப்பட்டுள்ளன. மீதமுள்ள மரக்கன்றுகள் நடும் பணிகளுக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
வார்டு 35-க்குட்பட்ட ரெட்டைமலை சீனிவாசன் தெருவில் ரூ.12.20 லட்சம் மதிப்பீட்டில் 110 மீட்டர் நீளம் மற்றும் 4 மீட்டர் அகலத்தில் இன்டர்லாக் பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் எருக்கஞ்சேரி, அண்ணா சாலை, ரெட்டைமலை சீனிவாசன் தெரு, கிருஷ்ணமூர்த்தி சாலை மற்றும் நயினார் தெரு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த சுமார் 1,200 பேர் பயன்பெறுவர்.
சாஸ்திரி நகர் - சர்மா நகர் கால்வாய் சந்திப்பில் வியாசர்பாடி கால்வாயில் 1,200 மீட்டர் நீளத்திற்கு ஏற்கனவே உள்ள சுவரை மூலதன நிதியில் ரூ.2.95 கோடி மதிப்பீட்டில் சுற்றுச்சுவர் உயர்த்திக் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
வார்டு 45-க்குட்பட்ட இளங்கோ நகரில் மூலதன நிதியில் ரூ.1.91 கோடி மதிப்பீட்டில் 337.62 சதுர மீட்டர் பரப்பளவில் தரைத்தளம் மற்றும் முதல் தளத்துடன் கூடிய நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் கட்டப்பட்டு வருகிறது.
தரைத்தளத்தில் UHIN/SHN, மருத்துவக் கலந்தாய்வு அரங்கம், மருத்துவப் பொருள் சேமிப்பு அறை, நிர்வாக அறை, முதல் தளத்தில் தடுப்பூசி அறை, அவசர சிகிச்சை அறை, ஆய்வகம் மற்றும் ஆய்வகச் செயலாக்கப் பகுதி, பணியாளர் அறை, RNTCP அறை, மகளிர் மருத்துவர் அறை, தொற்றா நோய் சிகிச்சைப் பிரிவு, வரவேற்பறை, மருந்தகம்/சேமிப்பு அறை மற்றும் கழிப்பறை வசதிகளுடன் கட்டப்பட்டு வருகிறது.
வார்டு 46-க்குட்பட்ட சத்தியமூர்த்தி நகர் பிரதான சாலையில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.86.70 லட்சம் மதிப்பீட்டில் 125 சதுர மீட்டர் பரப்பளவில் கூடுதல் கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. இதன் மூலம் எஸ்.எம். நகர் பிளாக்குகள், சமந்திப்பூ காலனி, கென்னடி நகர், ஜே.ஜே. நகர், தேபார் நகர், மல்லிப்பூ காலனி மற்றும் நேரு நகர் பகுதிகளைச் சார்ந்த மக்கள் பயன்பெறுவர்.
மேயர் கிருஷ்ணமூர்த்தி நகரில் மூலதன நிதியில் ரூ.94 லட்சம் மதிப்பீட்டில் 160.57 சதுர மீட்டர் பரப்பளவில் வரி வசூலிப்பாளர் அறை, மாமன்ற உறுப்பினர் அறை, உதவிப் பொறியாளர் பணியாளர், உதவிப் பொறியாளர் அறை, சுகாதார ஆய்வாளர் அறை, சேமிப்பு அறை, கழிப்பறை வசதிகளுடன் வார்டு அலுவலகக் கட்டடம் கட்டப்பட்டு வருகிறது.
கணேசபுரம் பிரதான தெருவில் நமக்கு நாமே திட்டம் மற்றும் மாமன்ற உறுப்பினர் வார்டு மேம்பாட்டு நிதியில் ரூ.2.50 கோடி மதிப்பீட்டில் 433.61 சதுர மீட்டர் பரப்பளவில் தரைத்தளம் மற்றும் இரண்டு தளங்களுடன் கூடிய சமுதாயக் கூடம் கட்டப்பட்டு வருகிறது.
தரைத்தளத்தில் அலுவலக அறை, வாகன நிறுத்துமிடம், வரவேற்பறை, முதல் தளத்தில் சேமிப்பு அறை, சமையலறை, கழுவும் பகுதி, உணவருந்தும் பகுதி, கை கழுவும் பகுதி, இரண்டாவது தளத்தில் மணமகள் அறை, மணமகன் அறை, கழிப்பறை மற்றும் படிக்கட்டு வசதிகள், அனைத்து தளங்களிலும் கழிப்பறை வசதிகள் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன.
அறிஞர் அண்ணா சாலையில் ரூ.4.17 கோடி மதிப்பீட்டில் பி.பி.சாலை, அறிஞர் அண்ணா சாலை சந்திப்பு முதல் ஸ்டீபன்சன் சாலை சந்திப்பு வரை 572 மீட்டர் நீளத்திற்கு மழைநீர் வடிகால் பணிகள் நடைபெற்று வருகிறது. இவற்றில் 572 மீட்டர் நீளத்திற்கு பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கஸ்தூரிபாய் காந்தி நகர், வியாசர் நகர், எம்.எம். கார்டன், பி.பி. சாலை, கணேசபுரம், பெரம்பூர் நெடுஞ்சாலை வடக்குப் பகுதி, மேல்பட்டி பொன்னப்பன் தெரு மற்றும் வார்டுகள் 44, 45, 70 பகுதியைச் சுற்றியுள்ள பகுதிகள் பயன்பெறுவர்.
கணேசபுரம் சுரங்கப்பாதையில் ரூ.8.79 கோடி மதிப்பிட்டில் ஜீவா ரெயில் நிலையம் அருகிலிருந்து குட்ஷெட் குளம் வரை 1216 மீட்டர் நீளத்திற்கு மழைநீர் வடிகால்கள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இவற்றில் 1,212 மீட்டர் நீளத்திற்கு பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் பி.பி. சாலை, பெரம்பூர் வடக்கு நெடுஞ்சாலை, பி.வி. காலனி, ஸ்டீபன்சன் சாலை, கணேசபுரம், மேல்பட்டி பொன்னப்பன் தெரு, ஸ்ரீராம் அவென்யூ, வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகர், சுந்தரம் நகர் மற்றும் வார்டு-46 பகுதியைச் சுற்றியுள்ள பகுதிகள் பயன்பெறுவர்.
தண்டையார்பேட்டை மண்டலம், வார்டு-37க்குட்பட்ட முல்லை நகர் மேம்பாலம் அருகில் மூலதன நிதியில் ரூ.1.21 கோடி மதிப்பீட்டில் 45 குதிரைத்திறன் கொண்ட 3 நீர்மூழ்கி மோட்டார்கள் மற்றும் 25 குதிரைத்திறன் கொண்ட 2 நீர்மூழ்கி மோட்டார்களுடன் கூடிய 5,40,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் மோட்டார் அறை அமைக்கப்பட்டு வருகிறது.
முல்லை நகர் மயானபூமி அருகில் மூலதன நிதியில் ரூ.93.26 லட்சம் மதிப்பீட்டில் 25 குதிரைத்திறன் கொண்ட 4 நீர்மூழ்கி மோட்டார்களுடன் கூடிய 2,05,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர்த்தேக்கத் தொட்டிகள் மற்றும் மோட்டார் அறை கட்டப்பட்டு வருகிறது.
குட்ஷெட் சாலையில் மூலதன நிதியில் ரூ.93.26 லட்சம் மதிப்பீட்டில் 25 குதிரைத்திறன் கொண்ட 4 நீர்மூழ்கி மோட்டார்களுடன் கூடிய 2,05,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் மோட்டார் அறை கட்டப்பட்டு வருகிறது.
இதன் மூலம் கிருஷ்ணமூர்த்தி நகர், எம்.கே.பி. நகர், ஆர்.ஆர். நகர், எம்.ஜி.ஆர். நகர், கோல்டன் காம்ப்ளக்ஸ், தாமோதரன் நகர், ஜே.ஜே. நகர், சாமியார் தோட்டம், எஸ்.எம். நகர் பிரதான சாலை, நேரு நகர் மற்றும் கென்னடி நகர் பகுதி மக்கள் பயன்பெறுவர்.
வார்டு 35-க்குட்பட்ட முத்தமிழ் நகர், கிழக்கு அவென்யூ பகுதியில் 13,569.65 சதுர அடி பரப்பளவிலான இடத்தில் ரூ.4.73 கோடி மதிப்பீட்டில் 7,897.09 சதுர அடி பரப்பளவில் புதிதாக மீன் மற்றும் காய்கறி மார்க்கெட் கட்டப்பட்டு வருகிறது. இதில் 78 எண்ணிக்கையிலான காய்கறி கடைகள், 24 எண்ணிக்கையிலான மீன் மற்றும் இறைச்சிக் கடைகள், மீன் வெட்டுவதற்கு 2 கடைகள், 104 எண்ணிக்கையில் இதரக் கடைகள் ஆகியவறை அமைக்கப்படவுள்ளது. இதன் மூலம் முத்தமிழ் நகர், எம்.ஆர்.நகர். காவேரி நகர் பகுதிகளைச் சார்ந்த 25 ஆயிரம் மக்கள் பயன்பெறுவர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.