உதயநிதி ஸ்டாலினுடன் பேரறிவாளன் சந்திப்பு

சேலத்தில் சினிமா படப்பிடிப்புக்காக தங்கியுள்ள உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ.வை நேற்று பேரறிவாளன் சந்தித்து நன்றி தெரிவித்தார். அப்போது, தனது மகனுக்கு திருமணம் செய்து வைக்க இருப்பதாக அற்புதம்மாள் கூறினார்.
உதயநிதி ஸ்டாலினுடன் பேரறிவாளன் சந்திப்பு
Published on

உதயநிதி ஸ்டாலினுடன் சந்திப்பு

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி 31 ஆண்டுகள் சிறையில் இருந்த பேரறிவாளன் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவினால் கடந்த 18-ந் தேதி விடுதலை செய்யப்பட்டார். இதையடுத்து தனது விடுதலைக்காக குரல் கொடுத்தவர்களை பேரறிவாளன் சந்தித்து நன்றி தெரிவித்து வருகிறார்.

அதன்படி சினிமா படப்பிடிப்புக்காக சேலத்தில் தங்கியுள்ள தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ.வை நேற்று மாலை பேரறிவாளன், அவரது தாய் அற்புதம்மாள் ஆகியோர் சந்தித்து நன்றி தெரிவித்தனர். அப்போது, மாமன்னன் படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜ் உடனிருந்தார்.

அற்புதம்மாள் பேட்டி

இதைத்தொடர்ந்து பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் நிருபர்களிடம் கூறியதாவது:-

31 ஆண்டுகள் சிறை வாசம் முடிந்து எனது மகன் விடுதலை செய்யப்பட்டுள்ளார். அவனது விடுதலைக்காக குரல் கொடுத்த அனைவரையும் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்து வருகிறோம். அதன்படி, முதல்-அமைச்சர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களையும் சந்தித்து வருகிறோம்.

சுப்ரீம் கோர்ட்டு அளித்துள்ள தீர்ப்பு சிறையில் வாடும் பலருக்கு பயனுள்ளதாக இருக்கும். 31 ஆண்டுகள் வலியும், வேதனையுடன் சிறை வாசம் முடிந்து வந்துள்ள பேரறிவாளனுக்கு ஒரு குடும்பத்தை அமைத்து கொடுக்க வேண்டும். அவருக்கு ஏற்ற பெண் கிடைத்தால் திருமணம் செய்து வைக்க தயாராக இருக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

வெளி உலகை காண்கிறேன்

தொடர்ந்து பேரறிவாளன் நிருபர்களிடம் கூறுகையில், 19 வயதில் சிறைக்கு சென்ற நான், 31 ஆண்டுகள் கழித்து தற்போது வெளி உலகை காண்கிறேன். சிறையில் எந்த டார்ச்சரும் நடக்கவில்லை. ஒரு சாமானிய மனிதன் ஒரு வழக்கில் சிக்கி கொண்டால் எத்தனை துன்பங்களை சந்திக்க முடியும். எவ்வளவு வலிகளை சுமக்க முடியும் என்பதை இந்த தண்டனை மூலம் தான் தெரிந்து கொண்டேன்.

ஒரு மாநில அமைச்சரவை எடுக்கும் முடிவே இறுதியானது. அது கவர்னரை கட்டுப்படுத்தும் என்பதை இந்த தீர்ப்பு கூறியுள்ளது. இது மற்ற 6 பேரின் விடுதலைக்கும் உறுதுணையாக இருக்கும் என்று நம்புகிறேன், என்றார்.

காளத்தூர் மணி

முன்னதாக மேட்டூருக்கு வந்த பேரறிவாளன் தனது தாயாருடன் திராவிடர் விடுதலை கழக தலைவர் கொளத்தூர் மணியை சந்தித்து பேசினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com