

சென்னை,
திமுக தலைவர் கருணாநிதி கடந்த 7-ம் தேதி மறைந்தார். இதையடுத்து திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கட்சியின் அவசர செயற்குழு கூட்டம் இன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக செயற்குழு அவசர கூட்டம் தொடங்கியது. க.அன்பழகன், துரைமுருகன், கனிமொழி, பொன்முடி, டி.ஆர்.பாலு, ஆ.ராசா, தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ் உள்ளிட்டோர் திமுக செயற்குழு அவசர கூட்டத்தில் பங்கேற்பு.
திமுக எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள், முன்னாள் எம்.எல்.ஏக்கள் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்பு. தலைமை செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட செயலர்கள், எம்.எல்.ஏ.க்கள், மாநில நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர். கூட்டம் அதிகரித்ததால் அரங்கம் நிரம்பி வெளியே நிர்வாகிகள் அமர்ந்துள்ளனர். அவர்கள் வசதிக்காக எல்இடி டிவிகள் வைக்கப்பட்டுள்ளன.
கூட்டத்தில் கட்சியின் தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
செயற்குழு கூட்டத்தில் கருணாநிதியின் சாதனைகளை பட்டியலிட்டு இரங்கல் தீர்மானம் டி.கே.எஸ்.இளங்கோவனால் வாசிக்கப்பட்டது.
கூட்டத்தில் ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ பேசியதாவது;-
நமக்கு எதிராக செயல்படும் அந்த உறவை நேரடியாக செயல் தலைவர் ஸ்டாலின் துண்டிக்க வேண்டும்; எதிர்ப்பு தெரிவிப்பவர்களை கண்டிக்க வேண்டும்.
செயல் தலைவர் ஸ்டாலினை தலைவராக தான் நாங்கள் பார்க்கிறோம்.
திமுக தலைவர் கருணாநிதியை ஸ்டாலின் மூலம் பார்க்கப்போகிறோம். சில இலைகள் திமுகவில் உதிரலாம், ஆனால் திமுக என்பது ஆலமரம் என கூறினார்.
திமுக செயற்குழு அவசர கூட்டத்தில் வி.பி.துரைசாமி பேசும் போது பெரியார், அண்ணா, கருணாநிதி என அனைத்தும் இனிமேல் ஸ்டாலின் தான் என கூறினார்.
டி.ஆர்.பாலு பேசும் போது வெற்றிடத்தை காற்று நிரப்புவதுபோல் கருணாநிதி இடத்தை ஸ்டாலின் நிரப்புவார் என கூறினார்.
தி.மு.க அவசர செயற்குழு கூட்டத்தில் சுப்புலெட்சுமி ஜெகதீசன் பேசும் போது, மத்திய அரசு திமுகவில் பிளவு ஏற்படுத்துவதற்கும், ஒழிப்பதற்கும் முயற்சித்து வருகிறது என கூறினார்.
முன்னாள் அமைச்சர் துரை முருகன் பேசும் போது,
பொது வாழ்வில் எப்படி வாழ வேண்டும் என்பதை எனக்கு திமுக தலைவர் கருணாநிதி கற்பித்தார்.
உறங்கும் நேரம் தவிர மற்ற நேரம் அனைத்தும் கருணாநிதியுடன் இருக்கும் வாய்ப்பை பெற்றேன். அறுவை சிகிச்சை மேற்கொண்ட எனக்கு 2-வது முறையாக உயிர் கொடுத்தவர் கருணாநிதி. சுய மரியாதையுடன் இருக்க வேண்டும் என்பார் திமுக தலைவர் கருணாநிதி.
எம்.ஜி.ஆர். உடன் நான் நெருக்கமாக இருந்தாலும் திமுக தலைவர் கருணாநிதியை பிரியவில்லை. எம்.ஜி.ஆர் அழைத்தபோது கருணாநிதியின் காலடியில் இருந்தவன் நான்.
எனது இரங்கல் கூட்டத்தில் கருணாநிதி உரையாற்றுவார் என நினைத்திருந்தேன். அரை நூற்றாண்டுக்கும் மேலாக ஊடல், சண்டை, மன வருத்தம் என எதுவும் இல்லை.
பெரியார், அண்ணா, கருணாநிதியின் மூன்று இதயங்களை கொண்டவர் மு.க.ஸ்டாலின். இந்த மூன்று இதயங்களை வெல்ல தமிழகத்தில் ஒரு கொம்பனும் இல்லை
திமுகவை வழிநடத்த மு.க.ஸ்டாலின் என்னும் ஆலவிழுதை திமுக தலைவர் கருணாநிதி விட்டுச்சென்றுள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.