

ஆலங்குடி,
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள விடுதி கிராமத்தில் பெரியார் முழு உருவசிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையை திராவிடர் கழகத்தினர் பராமரித்து வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு சில மர்மநபர்கள் பெரியார் சிலையின் தலையை உடைத்து தனியாக துண்டித்துள்ளனர். சிலையின் கையில் இருந்த தடியையும் உடைத்து சேதப்படுத்தி உள்ளனர்.
நேற்று காலை இதனை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆலங்குடி போலீசார் மற்றும் வருவாய்த்துறையினரும் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். அந்த பகுதியில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்காக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
இதற்கிடையில் சிலையில் இருந்து உடைத்து எடுக்கப்பட்ட தலையை அந்த பகுதி மக்கள் எடுத்துவந்து ஒட்டி சரிசெய்தனர். பின்னர் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பெரியார் சிலையை உடைத்தவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும். பெரியார் மற்றும் அம்பேத்கர் சிலைகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் போலீசில் புகார் செய்யப்பட்டது. ஆலங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதிக்கு அன்று இரவில் யார், யார் வந்து சென்றார்கள் என்பது குறித்து செல்போன் சிக்னல்கள் மூலம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரியார் சிலை உடைக்கப்பட்டதை கண்டித்தும், சிலையை உடைத்த மர்மநபர்களை கைது செய்ய வலியுறுத்தியும் திராவிடர் கழகம், தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, தே.மு.தி.க., ம.தி.மு.க. உள்பட பல்வேறு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.