பெரியார் சிலைகள் அவமதிப்பு: தூண்டியவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் டாக்டர் ராமதாஸ், கி.வீரமணி வலியுறுத்தல்

பெரியார் சிலைகளை அவமதிப்பு செய்ய தூண்டியவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்து தண்டனை பெற்றுத்தர வேண்டும் என டாக்டர் ராமதாஸ், கி.வீரமணி ஆகியோர் வலியுறுத்தி உள்ளனர்.
பெரியார் சிலைகள் அவமதிப்பு: தூண்டியவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் டாக்டர் ராமதாஸ், கி.வீரமணி வலியுறுத்தல்
Published on

சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சென்னை அண்ணா சாலையிலும், திருப்பூர் மாவட்டம் தாராபுரத்திலும் பெரியார் சிலைகள் அவமதிக்கப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. பெரியாரை எந்த வரையரைக்குள்ளும் அடக்க முடியாது. அவர் அனைவருக்காகவும் போராடியவர்; அனைத்துக்காகவும் போராடியவர். சமூக நீதி, பகுத்தறிவு என்றால் உடனடியாக நினைவுக்கு வருபவர் பெரியார் தான்.

பெரியார் மட்டும் தமிழகத்தில் அவதரித்து இருக்காவிட்டால் அடிமைப்படுத்தப்பட்ட மக்கள் அடிமைப்படுத்தப்பட்டவர்களாகவே இருந்திருப்பார்கள்; பறிக்கப்பட்ட சமூகநீதி பறிக்கப்பட்டதாகவே இருந்திருக்கும். தமிழ்நாட்டு மக்களுக்கு எந்த உரிமையும், சுதந்திரமும் வழங்கப்பட்டு இருக்காது. இதையெல்லாம் பொறுத்துக்கொள்ள முடியாதவர்கள் தான் பெரியாரின் உருவச் சிலை மீது காலணிகளை வீசி தங்கள் வெறுப்பைத் தீர்த்துக்கொள்கின்றனர்.

தூண்டியவர்களுக்கும் தண்டனை

தந்தை பெரியாரின் சிலைகள் அவமதிக்கப்பட்டதை தனித்த நிகழ்வாக பார்க்கக்கூடாது. தமிழகத்தின் பொது அமைதி மற்றும் நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் நோக்குடன் தான் சிலரால் தூண்டப்பட்டு இந்த நிகழ்வுகள் அரங்கேற்றப்பட்டுள்ளன. எனவே, தந்தை பெரியாரின் சிலைகளை அவமதித்தவர்களை மட்டுமின்றி, அவர்களைத் தூண்டியவர்கள் மீதும் கடுமையான பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து தண்டனைப் பெற்றுத்தர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தந்தை பெரியார் உடலால் மறைந்து 45 ஆண்டுகள் ஆகிவிட்டன. அவர் வாழும்போது சந்தித்த காட்டுமிராண்டிகளின் எதிர்ப்பு இன்னமும் தொடர்கிறது என்பதற்கு சரியான அடையாளமாக அவரது சிலை மீது காலணி வீசுவது போன்ற கீழ்த்தர நடவடிக்கைகளில் ஈடுபடுவது, குறிப்பாக ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.வினர் இந்த கயமைச் செயல்களில் ஈடுபட்டு ஓடி ஒளிகின்றன.

பெரியார் மண், திராவிட பூமி. இங்கு மக்களின் எதிர்வினைகள் அரசியல் ரீதியாக, ஜனநாயக வழிமுறைகளையொட்டியே வருமே தவிர, கலவரங்கள் மூலம் ஏற்படும் என்று கனவுகண்டு தூண்டிலைத் தூக்க நினையாதீர். அந்த ஆணவத்திற்கு வரும் தேர்தல்கள் மூலமும், மற்ற ஜனநாயக வழியில், அறப்போர்களின் மூலமும் விரைவில் இதன் தாக்கத்தை உணர்வீர்கள். அணையப் போகும் விளக்கு சற்று வெளிச்சம் காட்டுவது வழமைதானே. தூண்டியவர்களை விட்டு, அம்புகளுக்குத் தண்டனை கொடுத்துப் பயனில்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com