

சென்னை,
த.வெ.க. தலைவர் விஜய் பெரம்பூர் தொகுதியில் பிரசாரம் செய்வதற்கு பெரம்பூர் தொகுதிக்கு உட்பட்ட வியாசர்பாடி முல்லை நகர் பேருந்து நிலையம் அருகே உள்ள இடத்தை த.வெ.க.வினர் தேர்வு செய்தனர். அந்த இடத்துக்கு அனுமதி கேட்டு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து இருந்தனர். அந்த விண்ணப்பத்தில் 3 ஆயிரம் தொண்டர்கள் கலந்து கொள்வார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதை தேர்தல் நடத்தும் அதிகாரி கீதா மற்றும் போலீசார் பரிசீலித்தனர்.
அப்போது த.வெ.க கட்சியினர் அனுமதி கேட்டு உள்ள இடத்தில் 200-ல் இருந்து 300 பேர் மட்டுமே நிற்க முடியும் என போலீஸ் தெரிவித்ததாக கூறப்படுகிறது. அதன்பேரில் பெரம்பூர் தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி கீதா, த.வெ.க.வினர் கேட்ட இடத்தில் 3 ஆயிரம் பேர் நிற்க போதிய இடவசதி இல்லை. கூட்டம் கூடினால் நெரிசல் ஏற்படும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பிரசாரத்துக்கு அனுமதி வழங்க மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. மேலும் வேறு இடத்தை தேர்வு செய்து கூறுங்கள் அதற்கு அனுமதி வழங்குகிறோம் என போலீஸ் தரப்பில் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதற்கு த.வெ.க. தலைவர் விஜய் நேற்று கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் திட்டமிடப்பட்ட பிரசாரத்திற்கு சென்னை மாநகர காவல்துறையும், அதிகாரிகள் சிலரும் இணைந்து முட்டுக்கட்டை போட்டிருப்பது, ஜனநாயகத்தின் மீது நடத்தப்பட்டுள்ள ஒரு பாசிசத் தாக்குதல் என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் தேர்தல் பிரசாரத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டது தொடர்பாக புகார் அளிக்க த.வெ.க. தலைவர் விஜய் சென்னை தலைமைச் செயலகத்துக்கு நேரில் வந்துள்ளார். தலைமைச் செயலகத்தில் தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கை சந்தித்து தேர்தல் பிரசாரத்துக்கு உரிய அனுமதி வழங்கக் கோரி அவர் மனு அளித்துள்ளார்.