புத்தாண்டு தினத்தில் கோவில்களில் பக்தர்களுக்கு அனுமதி?

புத்தாண்டு தினத்தில் கோவில்களில் பக்தர்களை அனுமதிப்பது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் கலந்து பேசி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பார் என்று அமைச்சர் சேகர்பாபு கூறினார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

சென்னையில் துறைமுகம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட பிரகாசம் சாலை, அரசு பல்மருத்துவ கல்லூரி மாணவர் விடுதி மற்றும் நடைபாதை பூங்கா ஆகியவற்றை தொகுதி சட்டசபை உறுப்பினரும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான சேகர்பாபு நேரில் ஆய்வு செய்தார்.

பின்னர் நிருபர்கள் சந்திப்பில் பேசிய அமைச்சர் சேகர்பாபு, மழையால் வரும் காலங்களில் எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்க முதல்-அமைச்சர் உத்தரவிட்டு உள்ளார். அதனடிப்படையில் துறைமுகம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட ஒரு சில பகுதிகள் மற்றும் பல் மருத்துவ கல்லூரி முதல்வர், மாணவ, மாணவிகள் அளித்த புகாரின் அடிப்படையில் ஆய்வு செய்யப்பட்டது. பூங்கா பொதுக்கழிப்பிடமாக மாறியதுடன் புதர்மண்டி கிடக்கிறது. மாநகராட்சியினர் இதனை ஓரிரு நாட்களில் சரி செய்வார்கள்.

அரசு பல் மருத்துவ கல்லூரியில் கடந்த 1980-ம் ஆண்டு கட்டப்பட்ட மாணவ, மாணவிகள் விடுதிகளில் 380 மாணவிகளும், 105 மாணவர்களும் தங்கி படிக்கின்றனர். விடுதியை புனரமைப்பது குறித்து பொதுப்பணித்துறை அமைச்சர் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் ஆகியோரின் ஒத்துழைப்புடன் ஒவ்வொரு மாணவர்களுக்கும் தலா 100 சதுர அடியுடன் அனைத்து அடிப்படை வசதிகளும் கொண்ட உண்டு உறைவிடமாக அமைக்க முதல்-அமைச்சரிடம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில் வேண்டுகோள் வைக்க உள்ளேன்.

கொரோனா நோய் தொற்று கட்டுப்பாடுகளை கடைப்பிடிப்பதில், மத்திய அரசு வழிகாட்டும் நடைமுறைகளை மாநில அரசு கடைப்பிடிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. இருப்பினும் வருகிற புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கோவில்களில் பக்தர்களை அனுமதிப்பது குறித்து முதல்-அமைச்சர் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் கலந்து பேசி உரிய முடிவை அறிவிப்பார் என்று அவர் கூறினார்.

பல் மருத்துவ கல்லூரி ஆய்வின்போது அரசு பல் மருத்துவ கல்லூரி முதல்வர் டாக்டர் ஜி.விமலா, துணை முதல்வர் டாக்டர் சி.சபரிகிரிநாதன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com