9 மாதங்களுக்கு பிறகு திற்பரப்பில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு இன்று முதல் அனுமதி

9 மாதங்களுக்கு பிறகு திற்பரப்பு அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளித்து கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
9 மாதங்களுக்கு பிறகு திற்பரப்பில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு இன்று முதல் அனுமதி
Published on

நாகர்கோவில்,

கொரோனா தொற்று காரணமாக குமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி கடற்கரை, திற்பரப்பு அருவி, மாத்தூர் தொட்டிப்பாலம், மாநகராட்சி, நகராட்சி பூங்காக்கள் மற்றும் இதர சுற்றுலாத்தலங்களுக்கு செல்ல பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டது.

தொற்று படிப்படியாக குறைந்து வருவதால் கடந்த மாதம் கன்னியாகுமரி கடற்கரைக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இந்த நிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் திற்பரப்பு அருவி உள்ளிட்ட அனைத்து சுற்றுலாதலங்களுக்கும் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை செல்லலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகளை ஒழுங்குபடுத்தி அருவியில் குளிக்க அனுமதிக்க உள்ளாட்சி நிர்வாகம் கண்காணிக்க வேண்டும். ஒரே சமயத்தில் எத்தனை எண்ணிக்கையிலான ஆண் மற்றும் பெண் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுகிறார்களோ அதனடிப்படையில் சமூக இடைவெளியை கடைபிடித்து குளிக்க அனுமதி வழங்கப்படும்.

பொதுமக்கள் சுற்றுலா தலங்களுக்கு செல்லும் போது தவறாது முக கவசம் பயன்படுத்த வேண்டும். மேலும் சுகாதாரமும், பாதுகாப்பும் முதன்மையானது என்பதால் சுற்றுலா தலங்களுக்கு வரும் சுற்றுலா பயணிகள் குறைந்தபட்சம் 2 மீட்டர் தனி மனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் இருந்து சுற்றுலா தலங்களுக்கு வருவதையும், சுற்றுலா தலங்களில் இருந்து நோய் கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு செல்வதையும் பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்.

ஒருமுறை பயன்படுத்தப்பட்ட தட்டு, தம்ளர், தண்ணீர் பாட்டில் உள்ளிட்ட அனைத்தையும் அதற்கென அமைக்கப்பட்டுள்ள தொட்டியில் போட வேண்டும். கைகளை அடிக்கடி சோப்பு, கிருமிநாசினி கொண்டு நன்றாக சுத்தம் செய்யவும், எப்பொழுதும் சமூக இடைவெளியை பின்பற்றவும், அருவி மற்றும் சுற்றுலா பகுதியில் அமைந்துள்ள கடைகளில் தவறாது கிருமி நாசினியும் பயன்படுத்த கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மேலும் சுற்றுலா தலங்களை நிர்வகிக்கும் உள்ளாட்சி அமைப்புகள் சுற்றுலா பயணிகள் உள்ளே வரும் போதும், வெளியே செல்லும் போதும், கைகளை சுத்தம் செய்யும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும். சுற்றுலாதலங்களில் விதிமுறைகள் மீறப்படுவதை கண்காணித்து அபராதம் விதித்திட காவல்துறை, வருவாய் துறை, பொது சுகாதாரத்துறை, உள்ளாட்சி துறை கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 9 மாதங்களுக்கு பிறகு திற்பரப்பு அருவியில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com