ஈரோட்டில் விஜய் பரப்புரை கூட்டத்திற்கு அனுமதி

ஈரோட்டில் பெருந்துறை அருகே விஜய் பரப்புரை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது
சென்னை,
தமிழக சட்டமன்றத்தேர்தல் அடுத்த ஆண்டு (2026) நடைபெறவுள்ள நிலையில் த.வெ.க. தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை தீவிரமாக மேற்கொண்டு வந்தார். கரூரில் கடந்த செப்டம்பர் மாதம் 27-ந் தேதி நடந்த பிரசாரத்தில் கூட்டநெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு பின்னர் விஜய் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் இருந்தார்.
இருப்பினும் கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை மாமல்லபுரத்திற்கு நேரில் வரவழைத்து ஆறுதல் கூறினார். இருப்பினும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்தாமல் இருந்தார். இதனையடுத்து காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரி வளாக அரங்கத்தில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை விஜய் நடத்தினார்.
இதற்கிடையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தவெகவில் இணைந்தார். அவருக்கு நிர்வாகக்குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கப்பட்டது. கூடுதலாக ஈரோடு, கோவை, திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களுக்கு அமைப்பு செயலாளராகவும் நியமிக்கப்படுள்ளார்.
இந்த நிலையில், தவெக தலைவர் விஜய் வருகிற 18-ம் தேதி ஈரோடு மாவட்டத்தில் பிரசாரம் செய்ய உள்ளதாக செங்கோட்டையன் தெரிவித்தார்.
பிரசார பயணத்திற்கு அனுமதி கோரி ஈரோடு ஆட்சியர் கந்தசாமி மற்றும் காவல் கண்காணிப்பாளரை நேரில் சந்தித்து தவெக தலைமை ஒருங்கிணைப்பாளர் கே.ஏ.செங்கோட்டையன் மனு அளித்தார்.
விஜய் பரப்புரை செய்யும் இடம் இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமானது என விஜயபுரி அம்மன் கோயில் செயல் அலுவலர் மாவட்ட ஆட்சியர், காவல்துறையில் கடிதம் அளித்திருந்தார். இதனால் விஜய் பரப்புரை கூட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது.
இந்த நிலையில், ஈரோட்டில் பெருந்துறை அருகே விஜய் பரப்புரை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்து சமய அறநிலையத்துறை இடத்தை பயன்படுத்திக்கொள்ள தவெக சார்பில் கட்டணம் செலுத்தப்பட்டதால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.தவெக சார்பில் நிலத்தை பயன்படுத்த டெபாசிட் மற்றும் கட்டணமாக ரூ.1 லட்சம் செலுத்தப்பட்டது.






