கொல்லிமலை ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் குளிக்க அனுமதி: சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

நாமக்கல் மாவட்டத்தில் இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலாத்தலமாக கொல்லிமலை விளங்கி வருகிறது.
கொல்லிமலை ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் குளிக்க அனுமதி: சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி
Published on: 

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டத்தில் புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான கொல்லிமலை ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, வெள்ளப்பெருக்கு குறைந்ததை அடுத்து சுற்றுலா பயணிகளுக்காக மீண்டும் திறந்து விடப்பட்டுள்ளது.

ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி

நாமக்கல் மாவட்டத்தில் இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலாத்தலமாக கொல்லிமலை விளங்கி வருகிறது. இந்த மலையில் உள்ள வளப்பூர்நாடு ஊராட்சியில் வரலாற்று புகழ்வாய்ந்த அறப்பளீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் எதிரே உள்ள அடர்ந்த வனப்பகுதியில், சுமார் 300 அடி உயரத்தில் இருந்து தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது.

இந்த நிலையில், கடந்த வாரம் கொல்லிமலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ச்சியாக பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

நீர்வீழ்ச்சி மூடல்

அருவியின் அருகில் கூட செல்ல முடியாத அளவிற்கு தண்ணீர் பாறைகளின் மீது பயங்கர வேகத்துடன் சீறிப்பாய்ந்து விழுந்தது. இதனால் அருவிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பைக் கருதி, கடந்த வாரம் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி தற்காலிகமாக மூடப்படுவதாக வனத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் அறிவித்தது. அருவிக்கு செல்லவும் தடை விதிக்கப்பட்டது.

மீண்டும் திறப்பு

அதைத் தொடர்ந்து கடந்த சில நாட்களாக மலைப்பகுதியில் மழைப்பொழிவு இல்லாததால், ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் நீர் வரத்து படிப்படியாக குறைந்து சீரானது. இதையடுத்து, நீர்வீழ்ச்சி மீண்டும் சுற்றுலா பயணிகளின் வருகைக்காக திறந்து விடப்பட்டது.

நேற்று விடுமுறை நாள் என்பதால், இந்த நீர்வீழ்ச்சிக்கு வழக்கத்தை விட ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர். அவர்கள் ஆர்ப்பரித்துக் கொட்டும் நீர்வீழ்ச்சியில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். அருவி மீண்டும் திறக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com