

நெல்லை,
நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து சீரானதை தொடர்ந்து, சுற்றுலாப் பயணிகள் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள மணிமுத்தாறு அருவி மிகவும் பிரசித்தி பெற்றதாகும். ஆண்டு முழுவதும் தண்ணீர் விழும் இந்த அருவியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்வது வழக்கம்.
கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
இந்த தடை கடந்த 9 நாட்களாக நீடித்து வந்த நிலையில், தற்போது அருவியில் நீர்வரத்து சீராகியுள்ளது. இதையடுத்து, இன்று முதல் சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் அருவிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.