ஹைட்ரோகார்பன் சோதனைக் கிணறுகளை அமைக்க அனுமதி - எஸ்டிபிஐ கட்சி கண்டனம்


ஹைட்ரோகார்பன் சோதனைக் கிணறுகளை அமைக்க அனுமதி - எஸ்டிபிஐ கட்சி கண்டனம்
x

மண்ணின் வளத்தையும், கடல் வளத்தையும் பாதிக்கும் திட்டத்திற்கான அனுமதியை தமிழக அரசு ரத்துசெய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டத்தில் 20 இடங்களில் ஹைட்ரோகார்பன் சோதனைக் கிணறுகளை அமைக்க மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கு அனுமதி வழங்கியிருப்பது மிகுந்த கவலை அளிக்கிறது. ஒன்றிய அரசின் எண்ணெய் எடுப்பு கொள்கையின் கீழ், ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் 1403.41 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் ரூ.675 கோடி செலவில் இந்தக் கிணறுகள் தோண்டப்பட உள்ளன. தனிச்சியம், பேய்குளம், கீழசெல்வனூர், கே.வேப்பங்குளம், பூக்குளம் உள்ளிட்ட 20 இடங்களில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்தக் கிணறுகள் மண்ணின் வளத்தை மீட்க முடியாத அளவில் பாழ்படுத்துவதுடன், நிலத்தடி மற்றும் மேற்பரப்பு நீரின் தரத்தை மோசமாக்கி, பயிர் உற்பத்தியையும், கடலோரப் பகுதிகளில் வாழும் உயிரினங்களையும், மீனவ சமூகத்தின் வாழ்வாதாரத்தையும் பெரிதும் பாதிக்கும்.

2020 ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு திருத்த அறிவிக்கையின்படி, பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்படாமல் இந்த அனுமதி வழங்கப்பட்டிருப்பது சட்டவிரோதமானது. தமிழக முதல்வர், காவிரி டெல்டா உட்பட தமிழ்நாடு முழுவதும் ஹைட்ரோகார்பன் கிணறுகளுக்கு அனுமதி வழங்கப்படாது என உறுதியளித்திருந்தார். ஆனால், இந்த புதிய அனுமதி அவரது உறுதிக்கு மாறாக உள்ளது, இது விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எஸ்டிபிஐ கட்சி இந்த முடிவை வன்மையாகக் கண்டிப்பதோடு, உடனடியாக திரும்பபெறவும் வலியுறுத்துகிறது.

இந்த விவகாரத்தில் தமிழக முதல்-அமைச்சர் உடனடியாக தலையிட்டு, ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய வேண்டும். ஏற்கனவே இயங்கி வரும் ஹைட்ரோகார்பன் கிணறுகளின் செயல்பாடுகளை முற்றிலுமாக நிறுத்த வேண்டும். எதிர்காலத்தில் இதுபோன்ற திட்டங்களுக்கு முன்பு, பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் கருத்துகளைக் கேட்கும் கூட்டங்கள் கட்டாயம் நடத்தப்பட வேண்டும். எஸ்டிபிஐ கட்சி இந்தத் திட்டத்திற்கு எதிராக விவசாயிகள், மீனவர்கள், மற்றும் பொதுமக்களுடன் இணைந்து போராடும். தமிழக அரசு மக்களின் நலனை முன்னிறுத்தி, இந்த அனுமதியை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story