

பனமரத்துப்பட்டி,
அதிகாரிகள் ஆய்வு
மல்லூர் பேரூராட்சி வேங்காம்பட்டி பகுதியில் சேலம்-கரூர் ரெயில் செல்லும் தண்டவாளம் உள்ளது. இந்த பாதையில் பல நேரங்களில் ரெயில்கள் செல்வதற்காக ரெயில்வே கேட் மூடப்படுவதால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே வேங்காம்பட்டியில் ரெயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதுகுறித்து 'தினத்தந்தி'யில் செய்தி வெளியானது. மேலும் இந்த கோரிக்கையை வலியுறுத்தி, இப்பகுதி மக்கள் மல்லூர் பேரூராட்சி துணைத்தலைவர் வேங்கை அய்யனார் தலைமையில் இன்று ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் அறிவித்திருந்தனர்.
இந்த நிலையில், சேலம் ரெயில்வே உதவி கோட்ட பொறியாளர் தலைமையிலான அதிகாரிகள் வேங்காம்பட்டி ரெயில்வே கேட் பகுதியில் கடந்த 15-ந் தேதி ஆய்வு மேற்கொண்டனர்.
சுரங்கப்பாதை அமைக்க அனுமதி
இது குறித்து மல்லூர் பேரூராட்சி துணைத்தலைவர் வேங்கை அய்யனார் கூறியதாவது:-
வேங்காம்பட்டி ரெயில்வே கேட் பகுதியில் மேம்பாலம் அமைக்க இயலாது என்றும், அதற்கு பதிலாக அங்கு ரெயில்வே சுரங்கப்பாதை மட்டுமே அமைக்க இயலும் என இங்கு ஆய்வு செய்த ரெயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்காக மல்லூர் பேரூராட்சி சார்பில் அந்த பகுதியில் ரெயில்வே சுரங்கப்பாதை அமைத்து தர வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றி வழங்கும்படி ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். அதன்பேரில் மல்லூர் பேரூராட்சி சார்பில் தீர்மானம் நிறைவேற்றி ரெயில்வே அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டது.
இதைத்தொடர்ந்து வேங்காம்பட்டி ரெயில்வே கேட் பகுதியில் ரூ. 3 கோடியே 72 லட்சம் மதிப்பீட்டில் ரெயில்வே சுரங்கப்பாதை அமைக்க திட்டம் தயாரிக்கப்பட்டு அதற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்றும் ரெயில்வே துறையிடமிருந்து மல்லூர் பேரூராட்சிக்கு தபால் அனுப்பப்பட்டுள்ளது.
'தினத்தந்தி'க்கு நன்றி
இந்த ரெயில்வே சுரங்கப்பாதை அமைப்பதற்கு செய்தி வெளியிட்டு உறுதுணையாக இருந்த 'தினத்தந்தி'க்கு மல்லூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்கள் சார்பாக எங்களது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.