ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல் இயக்க அனுமதி


ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல் இயக்க அனுமதி
x
தினத்தந்தி 3 Sept 2025 4:00 PM IST (Updated: 3 Sept 2025 4:24 PM IST)
t-max-icont-min-icon

நீரவரத்து 15,000 கன அடிக்கு கீழ் குறைந்தால் மட்டுமே அருவியில் குளிக்க அனுமதி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தர்மபுரி

தென்மேற்கு பருவமழை காரணமாக கேரள மாநிலம் வயநாடு, கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

இந்த 2 அணைகளும் முழுமையாக நிரம்பி விட்டன. இதன் காரணமாக அணைகளின் பாதுகாப்பு கருதி கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகளில் உபரிநீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த நீர் தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக காவிரி ஆற்றில் கரைபுரண்டு தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருக்கிறது.

நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 32 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. கர்நாடக அணைகளில் இருந்து உபரிநீர் திறப்பு குறைக்கப்பட்டதன் காரணமாக நேற்று மாலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 24 ஆயிரம் கனஅடியாக நீர்வரத்து குறைந்தது. இருப்பினும் ஒகேனக்கல் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்பட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. காவிரி ஆற்றில் வரும் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் விதிக்கப்பட்ட தடையானது தொடர்ந்து நேற்று 3-வது நாளாக நீடித்தது.

இந்நிலையில், நீர்வரத்து குறைந்ததையடுத்து ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரிக்க தொடங்கியது. தற்போது காவிரி ஆற்றில் சுற்றுலா பயணிகளுக்கு பரிசல் சவாரி செய்வதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. மேலும் நீரவரத்து 15,000 கன அடிக்கு கீழ் குறைந்தால் மட்டுமே சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க அனுமதிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story