மதுரையில் இருந்து செங்கோட்டைக்கு பாசஞ்சர் ரெயில் இயக்க அனுமதி

மதுரையில் இருந்து செங்கோட்டைக்கு பாசஞ்சர் ரெயில் இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மதுரையில் இருந்து செங்கோட்டைக்கு பாசஞ்சர் ரெயில் இயக்க அனுமதி
Published on

மதுரை,

மதுரையில் இருந்து செங்கோட்டைக்கு தினமும் 3 ஜோடி ரெயில்கள் இயக்கப்பட்டு வந்தன. அதாவது, மதுரையில் இருந்து காலை 7 மணி, பகல் 11 மணி, மாலை 5 மணிக்கு செங்கோட்டைக்கு பாசஞ்சர் ரெயில் இயக்கப்பட்டது.

ஆனால், கொரோனா ஊரடங்கு காரணமாக அந்த ரெயில் சேவை நிறுத்தப்பட்டது. ஊரடங்கில் தளர்வுகளை தொடர்ந்து மதுரையில் இருந்து தற்போது காலை 7 மணிக்கு ஒரு ரெயிலும், செங்கோட்டையில் இருந்து மாலை 3 மணிக்கு ஒரு ரெயிலும் மட்டும் எக்ஸ்பிரஸ் கட்டணத்தில் இயக்கப்படுகின்றன.

இதற்கிடையே, மண்டல ரெயில்வே நிர்வாகங்களின் வேண்டுகோளின்படி, அனைத்து மண்டலங்களிலும் குறிப்பிட்ட சில பாசஞ்சர் ரெயில்களை மட்டும் இயக்க ரெயில்வே வாரியம் அனுமதி வழங்கியுள்ளது. இதற்காக ரெயில் பெட்டிகளை தயார்நிலையில் வைத்திருக்க அந்தந்த மண்டலங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

இந்த பட்டியலில் 111 ரெயில்கள் இடம்பெற்றுள்ளன. மதுரை கோட்டத்தில் நெல்லை-நாகர்கோவில், மதுரை-செங்கோட்டை பாசஞ்சர் ரெயில்கள் இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதில் செங்கோட்டையில் இருந்து காலை 6.30 மணிக்கு மதுரை புறப்படும் ரெயில் (வ.எண்.56735) மற்றும் மதுரையில் இருந்து மாலை 5.30 மணிக்கு செங்கோட்டை புறப்படும் ரெயில் (வ.எண்.56732) ஆகிய ரெயில்கள் அந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளன. ஆனால், ரெயில்கள் எப்போது முதல் இயக்கப்படும் என்ற தகவல் இல்லை.

ஏற்கனவே இயக்கப்படும் மதுரை-செங்கோட்டை ரெயிலில் எக்ஸ்பிரஸ் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயிலுக்கும் பாசஞ்சர் ரெயில் கட்டணம் வசூலிப்பது குறித்த அறிவிப்பு ஒரு வாரத்திற்குள் வெளிவர வாய்ப்புள்ளதாக ரெயில்வே வட்டாரத்தில் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com